நேருக்கு நேர் மோதிய லாரி - வேன்; மஞ்சள் நீராட்டு விழாவுக்குச் சென்றவர்களுக்கு நடந்த சோகம் | Van and lorry met with accident

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (02/02/2019)

கடைசி தொடர்பு:10:19 (02/02/2019)

நேருக்கு நேர் மோதிய லாரி - வேன்; மஞ்சள் நீராட்டு விழாவுக்குச் சென்றவர்களுக்கு நடந்த சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மஞ்சள் நீராட்டு விழாவுக்குச் சென்றவர்களின் வேனும் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி - வேன் மோதல்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மாகரல் கிரமத்தைச் சேர்ந்த லதா என்பவர் தன் உறவினர் மகளுக்கு நடக்கும் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொள்ள அதே பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு செய்யாறுக்கு டெம்போ வேனில் வந்துகொண்டிருந்தனர். அதேபோன்று வேலூர் மாவட்டம் மேலப்பழந்தையில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது லாரி ஒன்று. இந்த இரண்டு வாகனங்களும் செய்யாறு அடுத்த தும்பைப் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாகக் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதில் வேனின் முன்பகுதியும் லாரின் முன்பகுதியும் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் வேன் ஓட்டுநர், வேனில் பயணம் செய்த மாகரல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்  மற்றும் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது தெரிந்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற செய்யாறு போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு மருத்துவமனை அனுப்பிவைத்தனர். அங்கிருந்து அதிக காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விபத்து எப்படி நடந்தது எனவும் விபத்து நடந்ததுக்கான காரணம் என்ன என்பதையும் விசாரணை செய்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க