` தீப்பிடித்து ஓராண்டாகியும் சரிசெய்யப்படவில்லை!' - வேதனையில் மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்கள் | meenakshi amman temple fire accident complete one year

வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (02/02/2019)

கடைசி தொடர்பு:10:54 (02/02/2019)

` தீப்பிடித்து ஓராண்டாகியும் சரிசெய்யப்படவில்லை!' - வேதனையில் மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்கள்

ஆன்மிக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளதை மதுரை மக்கள் கவலையுடன் நினைத்துப் பார்த்து வருகிறார்கள்.

மீனாட்சி அம்மன்

இந்த நிலையில், பாதிப்படைந்த வீர வசந்தராயர் மண்டபத்தின் சீரமைப்புப் பணிகள் மெதுவாக நடப்பதாக மக்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். கடந்தாண்டு இதே நாளில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இரவு 10 மணிக்கு மேல் கோயிலைச் சாத்திவிட்டு, கோயில் ஊழியர்கள், கடைக்காரர்கள் எல்லோரும் கிளம்பியபோது கிழக்கு ராஜகோபுரத்துக்குச் செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபத்தில் திடீரென்று தீப்பிடிக்கத் தொடங்கியது. தீயணைப்புத் துறையினரும் பொதுமக்களும் திரண்டு வந்து விடியும் வரை கொழுந்துவிட்டு எரிந்த தீயை ஒருவழியாக அணைத்து முடித்தனர். இதில் 20 கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாயின. வீரவசந்தராயர் மண்டபமும் ஆயிரங்கால் மண்டபமும் சேதமடைந்தன.

வசந்தராயர் மண்டபத்தில் தூண்களும் மேற்கூரையும் பலத்த சேதமடைந்தன. இதன் சூடு தனியவே மூன்று நாள்களுக்கும் மேலானது. இந்தச் சம்பவத்துக்கு கோயிலினுள் அமைந்துள்ள கடைகள்தான் என்று புகார் கிளம்பவே கோயிலுக்குள் அமைந்துள்ள கடைகள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. கோயிலுக்குள் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

வீர வசந்தராயர் மண்டபத்தை அதன் தொன்மை மாறாமல் சீரமைக்க ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. அதன் பின்பு, சீரமைப்புப் பணிகளுக்கான தரமான கற்களைப் பெற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். தற்போது தீப்பிடித்த பகுதி மக்கள் செல்லாத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சீரமைப்புப் பணிகள் மெதுவாக நடந்து வருவதாக, மக்கள் கூறி வருகிறார்கள். இதற்கான வேலைகள் விரைவாக நடந்து வழக்கம்போல் வீர வசந்தராயர் மண்டபம் பழையபடி வர வேண்டும் என்று மக்கள் கோரி வருகிறர்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க