``சின்னத்தம்பி யானை கும்கியாக மாற்றப்படும்!’’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு | Chinnathambi elephant to be trained as Gumki, Says Dindigul sreenivasan

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (02/02/2019)

கடைசி தொடர்பு:11:10 (02/02/2019)

``சின்னத்தம்பி யானை கும்கியாக மாற்றப்படும்!’’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு

``சின்னத்தம்பி யானையைப் பிடித்து கும்கியாக மாற்றப்படும்’’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சூழலியல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கஜ யாத்திரை என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலை கலந்துகொண்டார்.

அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ``பெயருக்கு ஏற்றாற்போல, அந்த யானை சின்னத்தம்பிபோல நடந்துகொண்டிருக்கிறது. சின்னத்தம்பி யானை நாட்டுப் பகுதியில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியதால், அது காட்டுப் பகுதியில் தங்குவதில்லை. அதைப் பிடித்து கும்கியாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. விரைவில் சின்னத்தம்பி யானையைப் பிடித்து 20 அடி கூண்டில் வைத்து, பாகன்களை வைத்து ஒரு மாதம் அதற்குக் கும்கியாக மாற்றப் பயிற்சி கொடுக்கப்படும்.

சின்னத்தம்பி

மனிதர்களிடம் இருந்து யானைகளையும் யானைகளிடம் இருந்து மனிதர்களையும் காக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. விலங்குகளுக்கு ஐந்தறிவு என்று சொன்னாலும் அதனுடன் பழகிப் பார்த்தால், அதைவிட நல்ல நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கோவையில் நிலவும் பல மனித விலங்கு மோதல்களுக்குத் தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம்'' என்றார்.

இந்நிலையில், சின்னத்தம்பியைக் கும்கியாக மாற்றம் செய்யக் கூடாது என்று ஆனைக்கட்டி பழங்குடி பெரிய தடாகம் பகுதி இளைஞர்கல் வலியுறுத்தி வருகின்றனர்.