60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகோதய அமாவாசை! - நீராடும் பக்தர்கள் | Magodaya Amawasai Vedaranyeswarar temple offer special puja for devotees

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (02/02/2019)

கடைசி தொடர்பு:18:37 (05/02/2019)

60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகோதய அமாவாசை! - நீராடும் பக்தர்கள்

வருகிற தை அமாவாசை 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரக்கூடிய மகோதய புண்ணிய கால அமாவாசை ஆகும். அன்றைய நாளில் கடலில் நீராடி மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வது ஆனந்தமான பலனைத் தரும் என்கிறார்கள்.

வேதாரண்யேஸ்வரர் கோயிலில் பக்தர்கள்

வியதிபாத யோகத்தில் முடிவும் அமாவாசையின் முற்பகுதியும், திருவோண நட்சத்திரத்தின் நடுப்பகுதியும் சூரிய உதயமும், தை மாதம் திங்கள்கிழமை அன்று சேர்ந்து வருவதால் அன்றைய நாள்  மகோதய புண்ணிய கால அமாவாசை என்று கூறப்படுகிறது. அதாவது, அன்று  மகத்தான சூரிய உதயம் என்றும், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்றும், அதனாலேயே கிடைத்தற்கரிய அமாவாசையாகக்  கருதப்படுகிறது. எனவே மகோதய அமாவாசை அன்று கடல், ஆறு, குளம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீராடி, வேத வித்துக்களுக்கு தானம் கொடுத்தல், மந்திர ஜபம், தேவதா பூஜைகள், காம்ய ஹோமங்கள், பித்ரு பூஜைகள், சிரார்த்தம், தர்ப்பணம் போன்ற கர்மங்கள் செய்வது நற்பலனைத் தரும் என்றும், இந்த நாள் கோடி சூரிய கிரகணத்துக்குச் சமமானது என்றும் ஸ்ம்ருதி முக்தாபலம் என்ற வேத நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

``இந்த நல்ல நாளில் நாகை மாவட்டம், கோடியக்கரை கடல், வேதாரண்யம் கடல், வேதாமிர்த ஏரி மற்றும் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள மணிகர்னிகை தீர்த்தம் ஆகியவற்றில் நீராடி இறைவனை தரிசனம் செய்தால் கோடி சூரிய கிரகண காலங்களில் கடலில் நீராடிய புண்ணியம் கிடைப்பதோடு, சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்றும் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாதேவ தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருக்கிறார். எனவே, மகோதய அமாவாசை நாளில் பல்வேறு இடங்களிலிருந்து வேதாரண்யம் வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அனைவரையும் `வாங்க இறைவனை தரிசித்து அருள் பெறலாம்’ எனக் கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது.