``பா.ம.க-வுக்காக மல்லுக்கட்டும் காங்கிரஸ்! - `நோ’ சொன்ன ஸ்டாலின் | stalin says no for pmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (02/02/2019)

கடைசி தொடர்பு:11:57 (02/02/2019)

``பா.ம.க-வுக்காக மல்லுக்கட்டும் காங்கிரஸ்! - `நோ’ சொன்ன ஸ்டாலின்

பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியாவது தி.மு.க கூட்டணிக்குள் அழைத்துக்கொண்டு வந்துவிட, தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தீவிரமாக முயற்சி செய்தார். அம்முயற்சியை ஸ்டாலின் முறியடிக்கவே, தற்போது காங்கிரஸ் கட்சி அம்முயற்சியைத் தொடர்வதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 25 தொகுதிகளில் நிற்க தி.மு.க உறுதியாக இருக்கிறது. இக்கூட்டணிக்குள் பா.ம.க-வையும் கொண்டு வந்தால், வட மாவட்டங்களில் வாக்குகள் சிதறாமல் வெற்றியடையலாம், 40 தொகுதிகளிலும் வெற்றியடைய முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனராம். 

அதற்கு மு.க.ஸ்டாலின், ``அவர்கள் ஐந்து தொகுதிகளைக் கேட்டு விடாப்பிடியாக நிற்கிறார்கள். தர்மபுரி, சேலம் தொகுதிகளை வேண்டுமானால் அவர்களுக்கு ஒதுக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்படும் 10 தொகுதிகளில் உள் ஒதுக்கீடாக பா.ம.க-வுக்கு ஒதுக்கிக் கொள்ளலாம். இதற்கு மேல் வாய்ப்பில்லை. நாம் ஜெயிக்கக்கூடிய தொகுதிகளை அவர்களுக்கு ஏன் விட்டுத் தர வேண்டும்’’ என்றுள்ளார். ``பாட்டாளி மக்கள் கட்சியைத் தி.மு.க கூட்டணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் ஏன் படாதபாடுபடுகிறது’’ என்று தி.மு.க மூத்த எம்.பி ஒருவரிடம் பேசினோம். 

``தி.மு.க-வின் செல்வாக்கை குறைக்கத்தான். தி.மு.க நிற்கக்கூடிய தொகுதிகளை 20 ஆக குறைத்து, டெல்லியில் அதிகாரம் செலுத்தும் மையமாக மாறிவிடாதபடி காங்கிரஸ் காய் நகர்த்துகிறது. அதை ஸ்டாலின் முறியடித்துவிட்டார். இப்போது பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவந்தால், தன்னுடைய தொகுதிகளை விட்டுத் தர வேண்டியதிருக்கும் என்பதால் காங்கிரஸ் `கப்சிப்’ ஆகிவிட்டது. தி.மு.க வேட்பாளர்களில் வன்னியர் சமூகத்தவருக்கு அதிக வாய்ப்பளித்துவிட்டாலே போதும், பா.ம.க-வை தூக்கி சுமக்க வேண்டிய அவசியமில்லை என்பது ஸ்டாலினின் கருத்து’’ என்றார்.

ராமதாஸ் ஸ்டாலின்

தி.மு.க கூட்டணிக் கதவுகள் அடைபட்டதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது தைலாபுரம். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதை, ராமதாஸும் விரும்புவதாக பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் பிப்ரவரி 8-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கலாகிறது. பட்ஜெட்டை வரவேற்று ராமதாஸிடம் இருந்து அறிக்கை வெளியானாலே கூட்டணி உறுதி என்கிறார்கள்.