இரண்டு நாள்கள் பட்டினி... துரத்தி வந்த வனத்துறையினர்... காட்டில் மயங்கி விழுந்த சின்னத்தம்பி யானை | Chinna Thambi elephant entered Tirupur railway station

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (02/02/2019)

கடைசி தொடர்பு:22:34 (03/02/2019)

இரண்டு நாள்கள் பட்டினி... துரத்தி வந்த வனத்துறையினர்... காட்டில் மயங்கி விழுந்த சின்னத்தம்பி யானை

வனத்துறையினர் தொடர்ந்து துரத்திக்கொண்டு வந்ததால் 2 நாள்களாக உணவு, குடிநீரின்றி தவித்த சின்னத்தம்பி யானை காட்டில் மயங்கி விழுந்தது. இதனை வேறு இடத்துக்கு மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னத்தம்பி யானை


கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மாவட்டப் பகுதிகளான கணுவாய், தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, மருதமலை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த யானைதான் சின்னத்தம்பி. அப்பகுதியில் உள்ள விளை நிலங்களை இந்த யானை சேதப்படுவதாகக் கூறி யானையை இடமாற்றம் செய்ய முடிவெடுத்தனர் வனத்துறையினர். அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டுபோய் சின்னத்தம்பி யானையை இறக்கிவிட்டனர். ஆனாலும் அங்கிருந்து பயணப்பட்டு மக்கள் வசிக்கும் அங்கலக்குறிச்சி என்ற கிராமத்துக்குள் கடந்த 31-ம் தேதி நுழைந்தது யானை சின்னத்தம்பி. அப்போது பட்டாசுகள் வெடித்து யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தார்கள் வனத்துறையினர். இந்தநிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்துள்ளார் யானை சின்னத்தம்பி.

ரயில் நிலைத்தில் நுழைந்த சின்னத்தம்பி யானை

கடந்த 3 நாள்களில் மட்டும் 100 கிலோ மீட்டர்களுக்கும் மேலான தூரத்தைக் கடந்து பயணித்து வருகிறது சின்னத்தம்பி. டாப்சிலிப் பகுதியின் வரகளியாறு, அங்கலக்குறிச்சி, கோட்டூர் எனச் சுற்றித்திரிந்தது, தற்போது உடுமலையை அடுத்துள்ள தீபாலப்பட்டி, அம்மாபட்டி, கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இன்றைய தினம் காலை மைவாடி ரயில்நிலையப் பகுதிக்கு அருகே நுழைந்த சின்னத்தம்பியைக் காண பொதுமக்கள் ஏராளமானோர் கூடிவிட்டனர். பெரும்பாலும் மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளிலேயே நுழைந்து பயணித்துக்கொண்டு இருந்தாலும், இதுவரையில் சின்னத்தம்பி யானையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கடந்த சில நாள்களாகவே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் சின்னத்தம்பி யானையைப் பற்றி அதிக செய்திகள் பரவிவருவதால், சின்னத்தம்பியை நேரில் காண பொதுமக்களும் அதிக ஆர்வத்துடன் கூடிவருகிறார்கள். யானையைக் கராலில் அடைத்து கும்கியாக மாற்றும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இன்று இரவு அதற்கான வேலைகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

மயங்கி விழுந்து கிடக்கும் சின்னத்தம்பி யானை

இதனிடையே, வனத்துறையினர் தொடர்ந்து சின்னத்தம்பி யானையை துரத்திக்கொண்டே வந்தனர். உடுமலை அருகே உள்ள ஆர்.கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தண்ணீர் குட்டையில் யானை மயங்கி விழுந்தது.  2 நாள்களாக உணவு, குடிநீரின்றி தவித்ததால் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த யானை களைப்பால் காட்டில் மயங்கி விழுந்தது. தகவல் அறிந்து பொள்ளாச்சி எம்பி மகேந்திரன் காட்டிற்கு விரைந்து வந்தார். அவர் மயங்கிக் கிடந்த யானை குறித்து அங்கிருந்த வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக யானை அங்கு கிடக்கிறது.

இது குறித்து பேசிய மகேந்திரன் எம்பி, `சின்னத்தம்பி யானை இதுவரைக்கும் மக்களுக்கு சேதம் ஏற்படுத்தவில்லை. கேட்டை சேதப்படுத்தியுள்ளது. உயிர் சேதம் இதுவரை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கரும்பு விவசாயம் நடைபெறுகிறது. யானை கரும்பு தோட்டத்துக்குள் சென்றுவிட்டால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும். இதனால் விவசாயிகள் அச்சத்துடன் இருக்கிறார்கள். யானையை வேறு இடத்துக்கு மாற்ற வனத்துறையினர் ஆலோசித்து இருக்கிறார்கள். மக்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள இங்கு வந்துள்ளேன். வேறு இடத்துக்கு யானை மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்தோம். ``தொடர்ந்து நடந்ததால் சின்னத்தம்பி யானை களைப்பில் தூங்கியதே தவிர, மயக்கமடையவில்லை. அதேபோல், வரும் வழியில் உணவு எதையும் அந்த யானை எடுத்துக் கொள்ளவில்லை என்று வெளியாகும் தகவலிலும் உண்மை இல்லை. போதுமான அளவு உணவை சின்னத்தம்பி யானை வழியில் எடுத்துக் கொண்டது’ என்றனர்.