`கிராமத்தைத் தத்தெடுக்கிறேன்; உதவிக்காக வந்தேன்!’ - தி.மலை கலெக்டரை சந்தித்த நடிகை கெளதமி | actress gautami Greetings to tiruvannamalai collector

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (02/02/2019)

கடைசி தொடர்பு:14:30 (02/02/2019)

`கிராமத்தைத் தத்தெடுக்கிறேன்; உதவிக்காக வந்தேன்!’ - தி.மலை கலெக்டரை சந்தித்த நடிகை கெளதமி

`பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சிறந்து விளங்கும் மாவட்டத்துக்கு `மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை’ ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது.

திருவண்ணாமலை

அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான விருதை தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் பெற்றது. இந்த விருது கிடைப்பதற்கு மிக முக்கியக் காரணம் மாவட்டக் கலெக்டர் கந்தசாமி. இந்த விருதை அவரிடமே கொடுத்து அவரைப் பாராட்டியது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம். இந்த விருது மூலம் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்துக்கே பெருமை சேர்த்தார் கலெக்டர் கந்தசாமி. இதைப் பாராட்டியும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருவதற்காகவும் கலெக்டர் கந்தசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துகள் கூறியதோடு நன்றிகளையும் தெரிவித்தார் நடிகை கெளதமி.

கௌதமி

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் தேசிய அளவில் குறைவாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்களின் பிறப்பு விகிதத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. கருவில் உள்ள பெண் சிசுக்களை கருக்கலைப்பு செய்தவர்களைக் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார், ஆதரவற்ற காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவு நடந்துவந்த குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தினார். குழந்தைத் திருமணங்கள் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளி மாணவியர்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை கலெக்டர்

சமூகத்தில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துரைத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார். பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தார். பெண் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும் என்பதற்கு மாவட்டம் முழுவதிலும் 1,94,940 மாணவிகளைப் பெற்றோர்களுக்குக் கடிதம் எழுத வைத்தார். உயர்கல்வி படிக்க வசதியில்லாத மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க ஏற்பாடு செய்துதந்தார். தாய் தந்தையை இழந்து கஷ்டப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்தார். இன்னும் இதுபோன்று பல விழிப்பு உணர்வுகளையும் உதவிகளையும் செய்த கலெக்டர் கந்தசாமியைத் திருவண்ணாமலைக்கே சென்று நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் நடிகையும் லைப் அகைன் பவுண்டேஷன் நிறுவனருமான கெளதமி. 

இதுகுறித்து நடிகை கெளதமி கூறுகையில், ``விவசாயம் மற்றும் கல்வி உதவி, மருத்துவ உதவி ஆகியவற்றுக்கு உதவும் நோக்குடன் `லைப் அகைன் பவுண்டேஷன்' என்ற சேவை நிறுவனம் நடத்தி வருகிறேன். இதன் மூலம்  பல உதவிகளைச் செய்யவும், பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் உதவிகள் செய்ய ஆவளோடு இருக்கிறேன். மேலும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான பரிசோதனை முயற்சியாக ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க உள்ளேன். அதற்கான உதவியைக் கேட்டு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியைச் சந்திக்க வந்தேன். இந்த முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்றார். மேலும் அவர், மத்திய அரசிடம் விருது வாங்கியதற்குக் கலெக்டருக்கு வாழ்த்துகள் தெரிவித்தேன்’’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க