அடிக்கடி உடல்நலம் பாதிப்பு! - அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவிக்கு சிகிச்சை | Nirmala devi admitted in Madurai hospital

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (02/02/2019)

கடைசி தொடர்பு:16:25 (02/02/2019)

அடிக்கடி உடல்நலம் பாதிப்பு! - அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவிக்கு சிகிச்சை

நிர்மலாதேவி

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுக்குத் தவறான வழிகாட்டியதாகக் கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்த வழக்கில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம்குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் விசாரணை நடத்த, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். அதன்படி, அவர் விசாரணையை முடித்தார். பலமுறை ஜாமீன் கேட்டு நிர்மலா தேவி மனு அளித்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவருகிறது.

மருத்துவமனைக்கு வரும் நிர்மலாதேவி

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்துக்கு வரும்போது, நிர்மலா தேவி வாய்திறந்து சில கருத்துகளைத் தெரிவித்த நிலையில், இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருதய செயல்பாட்டில் பிரச்னை உள்ளதா என்பதுகுறித்து எக்மோ கருவி மூலமாக பரிசோதனை நடத்தப்பட்டது.

ஏற்கெனவே, சில தினங்களுக்கு முன் நிர்மலா தேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இன்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலா தேவியிடம்  விசாரணைகுறித்தும், உடல்நலக்குறைவு குறித்தும் கேட்டபோது, பதிலளிக்க மறுத்தார். நிர்மலா தேவிக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை என பலரும் தெரிவித்துவரும் நிலையில், அவருக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டுவருகிறது.