`கூட்டணி குறித்து அவதூறு பரப்புகிறார்கள்’ - ஜவாஹிருல்லா வேதனை | social media spreading slander about Coalition says jawahirullah

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (02/02/2019)

கடைசி தொடர்பு:17:25 (02/02/2019)

`கூட்டணி குறித்து அவதூறு பரப்புகிறார்கள்’ - ஜவாஹிருல்லா வேதனை

மிக விரைவில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணித் தொடர்பான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜவாஹிருல்லா

இந்நிலையில் தி.மு.க - மனித நேய மக்கள் கட்சி கூட்டணி குறித்து அவதூறு பரப்பப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சி கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அங்கம் வகித்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தமிழகம் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட பல அறப்போராட்டங்களில் கலந்துகொண்டு போராடிவருகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும், இணையதளச் செய்திகளிலும் மனிதநேய மக்கள் கட்சி - தி.மு.க உறவு குறித்து விஷமத்தனமாகக் கருத்துகள் பரப்பப்பட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பான ஆதாரமற்ற செய்திகளாகும். உள்நோக்கம் கொண்ட சிலர் வதந்திகளைப் பரப்பி நிறைவேற்ற விரும்பும் சதித் திட்டம் பலிக்காது.
மனிதநேய மக்கள் கட்சி தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் சமூகநல்லிணக்கத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் பெரும் ஆபத்தாய் உள்ள பா.ஜ.வை எதிர்த்துத் தேர்தல் களத்தில் போராடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.