சென்னை ஏர்போர்ட்டில் வாலிபரைச் சிக்கிவைத்த `கீச்சு கீச் சத்தம்`!- சிறுத்தைக்குட்டியைக் கடத்தி வந்தவர் கைது | Man arrested in Chennai airport over smuggling leopard cub

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (02/02/2019)

கடைசி தொடர்பு:17:38 (02/02/2019)

சென்னை ஏர்போர்ட்டில் வாலிபரைச் சிக்கிவைத்த `கீச்சு கீச் சத்தம்`!- சிறுத்தைக்குட்டியைக் கடத்தி வந்தவர் கைது

தாய்லாந்திலிருந்து சிறுத்தைக் குட்டியைக் கடத்தி வந்த காஜாமொய்தீன் என்பவரை சென்னை விமானப்பிரிவு சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்ததோடு, குட்டியைப் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தைக்குட்டி

தாய்லாந்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை தாய் ஏர்வேஸ் என்ற விமானம் வந்துள்ளது. இந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் விமானப் பிரிவு சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வாலிபர் ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, `கீச்சு கீச்' என வித்தியாசமாக சத்தம் எழுந்துள்ளது. இதனால் மேலும் சந்தேகமடைந்த அதிகாரிகள், வாலிபர் வைத்திருந்த சிவப்புக் கூடையைச் சோதனை செய்தனர். அதில் சிறுத்தைக்குட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரைப் பிடித்து அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பெயர் காஜாமொய்தீன் என்பது தெரியவந்தது. பின்னர், காஜாமொய்தீன் விமான நிலையக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தைக்குட்டி

இதனிடையே, வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள் மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டியை அவர்களிடம் ஒப்படைத்தனர். 1.1 கிலோ எடை கொண்ட இந்தச் சிறுத்தைக்குட்டி பான்தெரா பர்டஸ் இனத்தைச் சேர்ந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர். 

தாய்லாந்திலிருந்து சிறுத்தைக் குட்டி கடத்தி வரப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.