`எத்தனை பைக்குகளைத் திருடினேன்னு ஞாபகமில்லை சார்?' - போலீஸைத் திணறவைத்த திருடன்  | Chennai police arrests bike thief

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (02/02/2019)

கடைசி தொடர்பு:18:31 (02/02/2019)

`எத்தனை பைக்குகளைத் திருடினேன்னு ஞாபகமில்லை சார்?' - போலீஸைத் திணறவைத்த திருடன் 

பைக் திருடன் ஹரி

``கியர் இல்லாத பைக்குகளை மட்டுமே திருடுவேன். அதை ரயில்வே பார்க்கிங்கில் நிறுத்திவைத்துவிட்டு விற்பேன்'' என பைக் திருடன் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

சென்னையில் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துவந்தன. பைக் திருடர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தும் திருட்டுச் சம்பவங்கள் குறையவில்லை. அதில், கியர் இல்லாத பைக்குள் அதிக அளவில் திருடப்பட்டன. இதனால் கியர் இல்லாத பைக்குகளைக் குறிவைத்துத் திருடும் நபரைப் பிடிக்க, மயிலாப்பூர் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். 

இந்தச் சூழ்நிலையில், கடந்த 7-ம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கியர் இல்லாத பைக் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையிலான போலீஸார், பைக் திருடனைத் தேடினர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது, ஒருவர் கபாலீஸ்வரர் கோயிலிருந்து பைக்கை திருடிச்செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது. இதனால், அந்த நபரின் புகைப்படத்தை போலீஸார் பார்த்தபோது... அது, பிரபல பைக் திருடன் ஹரி என்பதை போலீஸார் கண்டறிந்தனர். ஹரியை போலீஸார் தேடிவந்த நிலையில், அவரைக் கைதுசெய்து, அவரிடமிருந்து ஏராளமான கியர் இல்லாத பைக்குளை போலீஸார் பறிமுதல்செய்தனர். 

 பைக் திருடன் ஹரி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கியர் இல்லாத பைக்குகளை மட்டுமே குறிவைத்துத் திருடுபவர், ஹரி என்கிற ஹரிகரன் (54). 10-ம் வகுப்பு வரையே படித்துள்ளார். ரயில்வே உணவகத்தில் சப்ளையராகப் பணியாற்றிவந்துள்ளார். அதில் கிடைத்த வருமானம் குடும்பத்தை நடத்தப் போதவில்லை.  அதனால், கடந்த 2015-ல் பைக் திருட ஆரம்பித்துள்ளார். அதன்பிறகு ஹரி, சிறைக்குச் செல்வதும் பிறகு வெளியில் வந்து பைக்குகளைத் திருடுவதையும் வாடிக்கையாகவைத்துள்ளார். திருடும் பைக்குகளை சைதாப்பேட்டை ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிடுவார். அதன்பிறகு, நல்ல விலைக்கு கேட்பவர்களிடம் அதை விற்றுள்ளார். அதன்மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துவந்துள்ளார். அவரிடமிருந்த 20 திருட்டு பைக்குகளைப் பறிமுதல்செய்ததோடு, ஹரியைக் கைது செய்துள்ளோம்'' என்றனர். 

ஹரி, போலீஸிடம் பரபரப்பான வாக்குமூலம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், ``நான் சிறுவயதில் தேனாம்பேட்டையில் குடியிருந்தேன். திருமணம் முடிந்த பிறகு, பெருங்களத்தூருக்குச் சென்றுவிட்டேன். திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. மேலும் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் கிடைக்கவில்லை.  அதனால்தான், பைக்குகளைத் திருடத் தொடங்கினேன். 2015, 2016-ல் சிட்பலபாக்கம் பகுதியில் 8 ஸ்கூட்டிகளைத் திருடி விற்றேன். அதில் போலீஸிடம் சிக்கிக்கொண்டேன். பிறகு, 2016ல் பைக் திருட்டு வழக்கில் சைதாப்பேட்டை போலீஸிடம் சிக்கினேன். 2017-ல் சேலையூர் போலீஸிலும், 2018-ல் சிட்லபாக்கம் போலீஸிலும் மாட்டிக்கொண்டேன்.

பைக் திருடன் ஹரி

முன்னதாக, மயிலாப்பூர் போலீஸாரும் என்னைக் கைதுசெய்துள்ளனர். போலீஸுக்குப் பயந்து திருடிய பைக்குளை முதலில் ரயில்வே பார்க்கிங்கில் விடுவேன். அதன்பிறகுதான் விற்பேன். பைக் திருட்டுமூலம் நல்ல வருமானம் கிடைத்தது. நான் கியர் இல்லாத பைக்குகளைத் திருடுவதற்கு சில காரணங்கள்  இருக்கு.

அந்த பைக்குகளைத்தான் பலர் விரும்பி வாங்கினர். மேலும், அந்த பைக்கின் லாக்குகளை உடைப்பதும் எளிது. இதுவரை மயிலாப்பூர், அபிராமபுரம், கோட்டூர்புரம், வேப்பேரி, சேலையூர், அண்ணா நகர், அமைந்தகரை, அசோக் நகர், சைதாப்பேட்டை, வடபழனி, விருகம்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், சிட்லபாக்கம், மண்ணிவாக்கம், குரோம்பேட்டை, மெரினா, மாம்பலம் எனப் பல இடங்களில் திருடியுள்ளேன். சுமார் 500-க்கும் மேற்பட்ட பைக்குளைத் திருடி விற்றுள்ளேன். திருடிய பைக்குகளை ரயில்வே வாகன காப்பகங்களில் விட்டுவைத்துள்ளேன். எத்தனை பைக்குகள், எத்தனை இடங்கள் என்பது எனக்கு சரியாக ஞாபகமில்லை. நான் திருடிய சில பைக்குகளை வாகன காப்பகங்களில் உள்ளன'' என்று கூறியுள்ளார். 

பைக்குளை விற்பது எப்படி என்று ஹரியிடம் போலீஸார் கேட்டதற்கு,  எனக்கு கியர் வண்டி ஓட்டத் தெரியாது. திருடிய பைக்குகளுக்குப் போலியாக ஆவணங்களைத் தயாரிப்பேன். பிறகு, குறைந்த விலைக்கு புரோக்கர்கள்மூலம் விற்றுவிடுவேன் என்று கூறியுள்ளார். ஹரி, சிசிடிவி கேமரா இல்லாத பகுதியை நோட்டமிட்டுதான் திருடுவாராம். இதனால்தான், அவர் போலீஸிடம் சிக்காமல் தப்பிவந்துள்ளார். மயிலாப்பூர் பகுதியில் அவர் 20-க்கும் மேற்பட்ட கியர் இல்லாத பைக்குகளைத் திருடியதால்தான் சிக்கியிருக்கிறார்.  

பைக் திருடன் ஹரி கொடுத்த தகவலின் அடிப்படையில், சில பைக்குகளை போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.