`வீடு கட்ட அனுமதிக்கணும்னா 12 ஆயிரம் கொடு! - கையும்களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளர் | Pudukottai village Panchayat secretary arrested for accepting bribery

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (02/02/2019)

கடைசி தொடர்பு:19:25 (02/02/2019)

`வீடு கட்ட அனுமதிக்கணும்னா 12 ஆயிரம் கொடு! - கையும்களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளர்

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூர் ஊராட்சியில், வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர், தனக்கு சொந்தமான  இடத்தில் வீடு கட்டிவருகிறார். வீட்டுக்கு அனுமதி வாங்குவதற்காக, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை அணுகினார். அப்போது, குன்னூர் ஊராட்சி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், அனுமதி வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால், அனுமதி வழங்காமல் வேளாங்கண்ணியை, ராஜேந்திரன் விரட்டியடித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த வேளாங்கண்ணி மற்றும் அவரின் உறவினர்கள், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், வேளாங்கண்ணியிடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பினர். வேளாங்கண்ணி, ஊராட்சிச் செயலாளரிடம் ரொக்கப் பணத்தைக்  கொடுக்கும்போது, மறைந்து இருந்த திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான காவல்துறை குழு, ராஜேந்திரனைக் கையும்களவுமாகப் பிடித்துக் கைது செய்தது. மேலும், இதுகுறித்து விசாரித்துவருகின்றனர்.