களத்துக்கு வரும் கலீம், மாரியப்பன் கும்கி யானைகள்! - சிக்குவாரா சின்னத்தம்பி? | Two kumki elephants deployed for catching Chinnathambi elephant

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (02/02/2019)

கடைசி தொடர்பு:18:54 (02/02/2019)

களத்துக்கு வரும் கலீம், மாரியப்பன் கும்கி யானைகள்! - சிக்குவாரா சின்னத்தம்பி?

திருப்பூர் மாவட்டம் உடுமலை மைவாடி பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை சின்னத்தம்பியைப் பிடிக்க, டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கலீம் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை வரவழைத்துள்ளனர்.

சின்னத் தம்பி யானை

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை சின்னதம்பியைக் கடந்த 25-ம் தேதி வனத்துறை அதிகாரிகள் பிடித்து பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டுபோய்  விட்டனர். ஆனால், அங்கிருந்து தன் குடும்பத்தைத் தேடி பயணத்தைத்  தொடங்கிய சின்னத்தம்பி யானை, நேற்றைய தினம் இரவு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதிகளுக்குள் நுழைந்தார்.  டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து வரகளியாறு, அங்கலக்குறிச்சி, கோட்டூர் எனச் சுற்றித்திரிந்தவர், தற்போது உடுமலையை அடுத்துள்ள தீபாலப்பட்டி, அம்மாபட்டி, கிருஷ்ணாபுரம், சர்க்கார் புதூர் போன்ற பகுதிகளைக் கடந்து, தற்போது மைவாடி என்ற பகுதியில் இருக்கிறது.

இதையடுத்து, சின்னத்தம்பி ஊருக்குள் சென்றுவிடாமல் இருக்க, தென்னை மட்டை, கரும்பு உள்ளிட்டவைகளைப் போட்டு வனத்துறையினர் தடுத்து வருகிறார்கள். கடந்த 3 நாள்களாகவே, சுமார் 150 கிலோ மீட்டர்களுக்கும் மேலாகப் பயணம்செய்துவந்த சின்னத்தம்பி யானை, தற்போது பெரும்  களைப்பின் காரணமாக மைவாடி பகுதியில் உள்ள ஒரு குட்டையில் படுத்து, சில மணி நேரம் வரை ஓய்வெடுத்து வந்தார். இந்தநிலையில், சின்னத்தம்பியைப் பிடித்து கும்கி யானையாக மாற்ற வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். எனவே, சின்னத்தம்பி யானையைப் பிடிப்பதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கலீம் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை வரவழைத்துள்ளனர். கும்கிகளின் உதவியோடு சின்னத்தம்பியை நாளை காலைக்குள் பிடித்துவிட வேண்டும் என்பதில் வனத்துறையினர் மும்முரமாக உள்ளனர்.