185-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் சென்னை மருத்துவக் கல்லூரி! | Madras Medical college 185th year celebration

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/02/2019)

கடைசி தொடர்பு:13:05 (03/02/2019)

185-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் சென்னை மருத்துவக் கல்லூரி!

ந்தியாவிலேயே இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்ற பெருமைக்குச் சொந்தமானது, சென்னை மருத்துவக் கல்லூரி.  மருத்துவத் துறைக்குப் பெருமைசேர்த்த, மருத்துவத்தின் பரிணாமத்தையே மாற்றி அமைத்த பல ஜாம்பவான்களை  உருவாக்கிய கல்லூரியும்கூட. தற்போது, 184-வது ஆண்டை நிறைவுசெய்து, 185-வது ஆண்டில் அடியெடுத்துவைக்க இருக்கிறது.

சென்னை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை

1664-ம் ஆண்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மருத்துவமனை ஒன்று தொடங்கப்பட்டது. ஆங்கிலேய போர் வீரர்களுக்கு  சிகிச்சை அளிக்கும் நோக்கில், மருத்துவமனையை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். 1772-ம் ஆண்டு, சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையத்துக்கு எதிர்புறத்துக்கு இந்த மருத்துவமனை மாற்றப்பட்டது. மருத்துவமனை நன்கு மேம்படுத்தப்பட்டவுடன்,  மருத்துவர்களை உருவாக்கும் வகையில், மருத்துவர் பயிற்சிப் பள்ளி ஒன்று 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், இந்தியாவைச்  சேர்ந்த மாணவர்கள் இந்தக் கல்லூரியில் நுழைய 1842-ம் ஆண்டுதான் அனுமதி அளிக்கப்பட்டது. 

1996-ம் ஆண்டில், ’சென்னை  மருத்துவக் கல்லூரி’ என்று பெயர் மாற்றம் அடைந்தது. இந்தக் கல்லூரியில் படித்த முதல்தொகுப்பு மாணவர்களுக்கு, 1852-ம் ஆண்டு பட்டம் அளிக்கப்பட்டது. இந்தியாவின் முதல்  பெண் மருத்துவரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவருமான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியை  உருவாக்கியதும் இந்தக் கல்லூரிதான். உலகின் முதல் நான்கு பெண் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் மேரி சார்லஸை  உருவாக்கிய பெருமையும் இந்தக் கல்லூரியையே சேரும். இன்றளவும் மருத்துவப் படிப்புக்குள் நுழையும் மாணவர்களின் முதல் தேர்வாக இந்த மருத்துவக் கல்லூரிதான் இருந்துவருகிறது. 

185-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த பெருமைமிகு கல்லூரி, இன்னும் பல திறமையான மருத்துவர்களை  நிச்சயம் உருவாக்கும்.