`வேலூர் சிறையில் விதிமீறல்!’ - கைதிகளிடம் அதிரடி காட்டிய போலீஸ் படை | Violation in Vellore jail-The police force that showed off the prisoners

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (02/02/2019)

கடைசி தொடர்பு:19:55 (02/02/2019)

`வேலூர் சிறையில் விதிமீறல்!’ - கைதிகளிடம் அதிரடி காட்டிய போலீஸ் படை

வேலூர் மத்திய சிறையில், கைதிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மற்றும் செல்போன் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, 50 பேர் கொண்ட போலீஸ் படை, இன்று காலை அதிரடியாக சிறைக்குள் சென்று சோதனை நடத்தியது.

வேலூர் மத்திய சிறை

வேலூர் மத்திய சிறையில், கைதிகள் சுகபோகமாகத் தண்டனையை அனுபவிக்கிறார்கள். சிறைக்குள் கஞ்சா, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருள்கள் எளிதில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல, வெளியில் உள்ள கூட்டாளிகளிடம் பேசுவதற்கு புது சிம்கார்டு போடப்பட்ட செல்போனும் வழங்கப்படுகிறது. கைதிகளுக்குத் தேவையானவற்றை சிறைக்காவலர்களே செய்துகொடுப்பதாகப் புகார் கூறப்படுகிறது. சிறையில் சட்டவிரோதமாக நடைபெறும் விதிமீறல்களை, சிறைத்துறை அதிகாரிகளின் விளக்கங்களோடு சமீபத்தில் ‘விகடன்’ அம்பலப்படுத்தியது.

இந்த நிலையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் 50 பேர் கொண்ட போலீஸ் படை, இன்று காலை அதிரடியாக மத்திய சிறைக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். கைதிகளின் அறை, கழிவறை உள்பட சிறை முழுவதும் சல்லடை போட்டு சோதனையிட்டனர். ஆனால், போதைப்பொருள்கள், செல்போன்கள், ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை. இதுபற்றி போலீஸாரிடம் கேட்டதற்கு, ‘‘சிறையில் விதிமீறல்கள் நடைபெறுவதைத் தடுக்க, மாதம் ஒருமுறை நடத்தப்படும் வழக்கமான சோதனை தான். கைதிகளிடமிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை’’ என்றனர்.

வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பும் இன்று காலை நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு, ஆண்கள் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன், பெண்கள் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு, நளினியைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசிய பிறகு, 9.45 மணிக்கு மீண்டும் ஆண்கள் சிறைக்கு அழைத்து வரப்பட்டு, முருகன் அடைக்கப்பட்டார்.