பழிக்குப் பழியாக நடந்த இரட்டைக் கொலை! - நெல்லையில் பதற்றம் | Two surrender before nellai court over Double murder

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (02/02/2019)

கடைசி தொடர்பு:20:25 (02/02/2019)

பழிக்குப் பழியாக நடந்த இரட்டைக் கொலை! - நெல்லையில் பதற்றம்

நெல்லை மாவட்டத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரு ரவுடிகள் மர்மக் கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலைக்கு பழிவாங்குவதற்காக இந்த இரட்டைக் கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பழிக்குப் பழியாக இரட்டைக்கொலை

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள வீரவநல்லூரைச் சேர்ந்தவர், சுடலைமணி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர், கணேசன். நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரின் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு நெல்லை மேலப்பாளையம் அருகே செல்வம் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளிகளாக உள்ளனர். 

செல்வம் கொலை வழக்கு விசாரணையின்போது கைதுசெய்யப்பட்ட இருவரும், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இருவரும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராஜ வேண்டியிருந்தது. அதனால் சுடலைமணி, முன்னீர்பள்ளம் அருகே உள்ள கான்சாபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் கணேசன் மற்றொரு நண்பர் ஆகியோர் வந்து தங்கியிருந்துள்ளனர். சுடலைமணியும் கணேசனும் வீட்டுக்கு வெளியே பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மக் கும்பல், அவர்களைச் சரமாரியாக வெட்டியுள்ளது.

பயங்கர ஆயுதங்களுடன் வந்த அந்தக் கும்பல் வெட்டியதில், சுடலைமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தப்பி ஓட முயன்ற கணேசன் அங்கிருந்து ஓடியபோது, அவரை விரட்டிச்சென்ற கும்பல் அவரையும் காட்டுப் பகுதியில் வெட்டி வீழ்த்தியது. ஒரே நேரத்தில் இரு ரவுடிகள் கொல்லப்பட்ட சம்பவத்தால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவே அச்சப்பட்டார்கள். 

சம்பவம் பற்றி அறிந்ததும், நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரான அருண் சக்திகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், கொலையான இருவரின் உடல்களையும் மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தினார்கள். 

வெறிச்சோடிய கிராமம்

கடந்த 2017-ம் வருடம், வீரவநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரை சுடலைமணியும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொலைசெய்தார்கள். அந்தக் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த இரட்டைக்கொலை நடந்திருப்பது தெரியவந்தது. பழைய கொலைக்குப் பழிவாங்கக் காத்திருந்தவர்கள், இருவரையும் பின்தொடர்ந்து வந்து கொலைசெய்தது தெரியவந்தது. இதனிடையே கொலையாளிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். மேலும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.