கரூர் வெற்றிலை விவசாயிகளை வாட்டிய இலை கருகல் நோய்! - கைகொடுத்த தோட்டக்கலைத் துறை | Horticulture Department organises grievance meet for karur Betel farmers

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (02/02/2019)

கரூர் வெற்றிலை விவசாயிகளை வாட்டிய இலை கருகல் நோய்! - கைகொடுத்த தோட்டக்கலைத் துறை

கரூர் மாவட்ட வெற்றிலை விவசாயிகள், சமீக காலமாக வெற்றிலை இலை கருகல் நோயால் அல்லல்பட்டு,வெற்றிலை விளைச்சல் குறைவதாகக் குமுறிவந்தனர். அவர்களுக்கு, பிரதம மந்திரி நீர்ப் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை கரூர் மாவட்ட தோட்டக்கலை துறை மேற்கொண்டுவருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிலைத் தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு

 

 

தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் கரூர் மாவட்ட வெற்றிலை என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை, சேமங்கி, முத்தனூர்,கோம்புபாளையம்,திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வெற்றிலையை வேலாயுதம்பாளையம் பகுதிகளில் செயல்பட்டுவரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கு அனுப்பிவைக்கின்றனர். இப்பகுதிகளிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரெயில் மூலம் வெற்றிலை ஏற்றுமதி நடைபெறுகிறது.

வெற்றிலை விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம்

ஆனால்,வெற்றிலை விவசாயத்தில் சமீப காலமாக நோய் தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்பட்டு, உற்பத்தியும் லாபமும் குறையத் தொடங்கியது. எனவே, இதில் கவனம் செலுத்திட தமிழக அரசிடம் தொடர் கோரிக்கை வைத்துவந்தார்கள் விவசாயிகள். அதன் அடிப்படையில், வேளாண் அறிவியல் மையம் மற்றும் கரூர் மாவட்ட தோட்டக் கலை துறை சார்பில் வெற்றிலை விவசாயிகளுக்கு உற்பத்திப் பெருக்கம், சந்தைப்படுத்துதல் போன்றவைகுறித்து பயிற்சி முகாம், கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த வெற்றிலை விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்சி மகளிர் தோட்டக்கலை  கல்லூரி பயிர் மற்றும் நோயியல் துறை உதவி பேராசிரியை கீதா கலந்துகொண்டு விவசாயிகளுக்கு  நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். கரூர் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் மோகன் ராம், வேளாண் அறிவியல் மையத்தின் முதுகலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம், கரூர் வட்டார வேளாண் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர் .இக்கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம்  திரவியம் கூறுகையில், ``மத்திய அரசு, விவசாயிகளுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் உற்பத்தி முறைகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகுறித்து வழிகாட்டுதல் மேற்கொண்டுவருகிறது. விவசாயிகளுக்கு அவர்கள் இருக்கும் பகுதிகளுக்குச் சென்று, அவர்களின் குறைகளையும் சந்தேகங்களையும் கேட்டுப் பயன்பெறும் வகையில் பயிற்சிகளை வழங்கிவருகிறோம்" என்றார்.

வெற்றிலை விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம்...

கரூர் மாவட்ட வெற்றிலை விவசாய சங்கத் தலைவர் கூறுகையில், ``வெற்றிலையை கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையத்தில் பயிரிட்டுவருகிறோம். ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் பல விவசாயிகள் சேர்ந்து பயிரிட்டு வரும் வெற்றிலை விவசாயத் தொழில்,சமீபகாலமாக நுகர்வுத்தன்மை குறைந்த காரணத்தினாலும், நீர்ப் பாசனம் பற்றாக்குறை காரணத்தாலும் உற்பத்தி குறைந்துவருகிறது. இதனால், ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யக்கூடிய அளவு குறைந்துகொண்டே வருவது வருத்தம் அளிக்கிறது. வெற்றிலையில் கணிசமான வருவாய் இழப்பு தொடர்ந்து ஏற்பட்டுவருவதற்கு முழுக் காரணம், பயிரில் பூச்சி நோய் தாக்குதலே. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதை உணர்ந்து, தோட்டக்கலை துணை இயக்குநர் அவர்களும், கரூர் மாவட்ட நிர்வாகமும் அக்கறை கொண்டு  விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளை ஆராய்ந்து, மண் மாதிரி, நீர் மாதிரி, வெற்றிலை மாதிரி, உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, எங்கள் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் நோக்கில் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரச்னைக்கான தீர்வை வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி" என்றார்.