போட்டோஷாப்பால் சிக்கிய தமிழக பா.ஜ.க - ஒருமணிநேரத்தில் நீக்கப்பட்ட பதிவு! | TN bjp unit embarrassed after posting Photoshop news

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (03/02/2019)

கடைசி தொடர்பு:07:00 (03/02/2019)

போட்டோஷாப்பால் சிக்கிய தமிழக பா.ஜ.க - ஒருமணிநேரத்தில் நீக்கப்பட்ட பதிவு!

துபாய் தெருக்களை குஜராத் தெருக்களாக போட்டோஷாப் செய்ததில் தொடங்கி, ராணுவ பெண் அதிகாரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளாக சித்தரித்தது வரை, தினமும் புதிய புதிய டிசைன்களில் போட்டோஷாப்புகள் உலா வருகின்றன. இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புவது பி.ஜே.பி.யினர் தான் என்கிற குற்றச்சாட்டு நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதனை பி.ஜே.பி. தலைமை மறுத்தும் வந்தது. இனி அது முடியாது போல..

ஸ்டாலின் பேசாத ஒன்றை பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஒரு போட்டோஷாப் பொய் செய்தியை, தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டு, கண்டனம் எழுந்தவுடன் பிறகு நீக்கிவிட்டு தமிழ்நாடு பி.ஜே.பி. அசிங்கப்பட்டு நிற்கிறது. கடந்த ஜனவரி 30ம் தேதி கருணாநிதி சிலைதிறப்பு விழாவுக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருப்பூரில் துறைமுகம் அமைக்கப்படும்!" என்று கூறியதாக, பொய்யான செய்தி ஒன்று செய்தி சேனலின் 'ப்ரேக்கிங் நியூஸ்' வடிவில் போட்டோஷாப்பாக பரவி வருகிறது.

போட்டோஷாப் 

இதன் உண்மைத் தன்மையை அறியாமலேயே, அ.தி.மு.க., பி.ஜே.பி. ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்களோடு முடிந்துபோயிருந்தால் சரி, தமிழ்நாடு பி.ஜே.பி.யும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த போலியான போட்டோஷாப் செய்தியை பிப்ரவரி 2ம் தேதி இரவு 8:14 மணிக்கு பதிவிட்டது. பதிவில், "திருப்பூரில் துறைமுகமா!! ஒன்பது கிரகங்கள் உச்சத்தில் இருக்கும் ஒருவரால் தான் இந்த லெவலுக்கு யோசிக்க முடியும்" என்று நக்கலாக கமெண்ட் வேறு அடித்திருந்தனர். இது போலி செய்தி என்று கண்டனக் குரல்கள் எழும்ப, பதிவிட்ட ஒரு மணிநேரத்திலேயே செய்தி நீக்கப்பட்டது.

திருப்பூர் அல்லது ஈரோடு மாவட்ட பி.ஜே.பி. தலைவரை அழைத்து விசாரித்திருந்தாலே, ஸ்டாலின் அப்படி கூறினாரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும். குறைந்தபட்சம் செய்தியை உறுதிப்படுத்திவிட்டு பதிவிடும் எண்ணம் கூட இல்லாமல், அதிகாரப்பூர்வ பக்கத்தில் போட்டோஷாப் பொய்ச் செய்தியை பி.ஜே.பி. பதிவிட்டுள்ளது, சமூக வலைதளவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

போட்டோஷாப்

அவ்வப்போது இதுபோன்ற தவறான  போட்டோஷாப்புகளை ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவிட்டு, பிறகு நீக்கிவிடுவார். தான் பதிவிடும் செய்தி விவகாரம் ஆகும் பட்சத்தில், தனது அட்மின் தான் செய்தியை பதிவிட்டதாக ஹெச்.ராஜா 'ஜம்ப்' அடிப்பார். திருப்பூர் துறைமுகம் போலிச் செய்திக்கு தமிழ்நாடு பி.ஜே.பி. தலைமை என்ன காரணம் கூறப் போகிறார்களோ தெரியவில்லை.