`சென்னை, கோவை, மதுரையில் விரைவில் மின்சார பேருந்துகள்' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்! | "Electric Buses will be implement soon says minister vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (03/02/2019)

கடைசி தொடர்பு:10:00 (03/02/2019)

`சென்னை, கோவை, மதுரையில் விரைவில் மின்சார பேருந்துகள்' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்!

"தேர்தல் கருத்து கணிப்பா,இல்லை கருத்து திணிப்பா?. இதுபோல்,எங்களிடமும் கருத்து கணிப்பு உள்ளது. தேர்தல் வரட்டும் பார்ப்போம்" என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் அ.தி.மு.க சார்பில் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இரண்டு நாள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் எதையோ சொல்கிறார்கள். ஆனால்,அது கருத்து கருத்து கணிப்பா,இல்லை கருத்து திணிப்பா?. இதுபோல்,எங்களிடமும் கருத்து கணிப்பு உள்ளது. தேர்தல் வரட்டும் பார்ப்போம். ஜெர்மன் நாட்டை சேர்ந்த கே.எப்.டபுள்யூ என்ற அமைப்பின் மூலம்,12 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளோம். 2000 ஆயிரம் மின்சாரம் பேருந்துகளும்,10 ஆயிரம் பி.எஸ்.6 பேருந்துகளும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம்.

விரைவில்,சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேருந்துகளை இயக்கவுள்ளோம். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அதிகப்படியான வேலை வாங்குவதாக சொல்கிறார்கள். இதை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அதிகப்படியான வேலை நேரம் அல்லது அதிக கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்க வற்புறுத்தப்படுவதில்லை. குறிப்பிட்ட வழித்தடங்களில் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளே பின்பற்றப்படுகிறது.

கரூர் மாவட்டம் வளர்ந்து வரும் ஒரு மாவட்டமாகும். இங்கு நடைபெறும் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமானத் திட்டங்களுக்கு தேவையான மணலை அமராவதி ஆற்றில் மாட்டு வண்டிகளில் அள்ளுவதற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டு,முறையாக ரசீது வழங்கி மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. தனி நபர் ஒருவர் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்காலிகத் தடை ஆணை பெற்று உள்ளார். இந்த தடையால் தொழில் வளர்ச்சிக்கும்,தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஆகவே,நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையான அனுமதியை பெற்று,மாட்டு வண்டிகளில் மணல் அள்ள உத்தரவு வாங்க முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார்.