திருச்சியில் காவலர் தற்கொலை -காரணம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை! | tamil nadu special 1 battalion police constable commits suicide

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (03/02/2019)

கடைசி தொடர்பு:10:20 (03/02/2019)

திருச்சியில் காவலர் தற்கொலை -காரணம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை!

தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கான காவலர் குடியிருப்பில் காவலர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதுடன், ரத்தக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

காவலர் முத்து

தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி திருச்சி கிராபர்ட்டியில் உள்ளது. இங்கு அரியலூர் மாவட்டம் வாணதிரையான் பட்டினம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் முத்து  என்பவர் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2016 -ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த முத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட அரசு காவலர் குடியிருப்பில் தங்கி  உள்ளார். நேற்று காலை முத்து சாப்பிட வராததால்  சக காவல்துறை நண்பர்கள் முத்துக்குப் போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்கவில்லை என்பதால், அறையில் சென்று பார்த்தபோது அறைக் கதவு  உள் தாழ் போடப்பட்டிருந்தது.

ஜன்னல் வழியாகப் பார்த்தபோது முத்து தூக்கில் தொங்கவே அதிர்ச்சியடைந்த நண்பர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவரது கழுத்தில் ரத்த காயங்கள் இருந்தது. மேலும் அவரின் அருகில் உடைந்த பாட்டில் ரத்தக்கறையுடன் இருந்தது. பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தி முத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிர் போகாததால், தனது லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

முத்து மரணம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி கமாண்டண்ட் உமையாள், மற்றும் திருச்சி எடமலைப்பட்டி காவல்துறை முத்துவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றர். அப்போது முத்து கடிதம் எழுதியிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலாம் அணி அதிகாரிகள், போலீஸ்காரர்களுக்கு அடிக்கடி மெமோ உள்ளிட்ட தண்டனைகள் அளித்து வந்ததாகவும் இந்த டார்ச்சர் காரணமாக முத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணம் ஏதேனும் காரணம் உண்டா என காவல்துறை விசாரித்து வருகிறார்கள். காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முத்து உள்ளிட்ட தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் அரசியல் கூட்டங்கள், தலைவர்கள் நிகழ்ச்சிகளுக்குப் பாதுகாப்பு பணிக்குச் சென்று வருவது வாடிக்கை. அந்தவகையில்  கடந்த வெள்ளிக்கிழமை, ஸ்ரீரங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்குப் பிரச்னைகள் வராமல் இருக்கப் பாதுகாப்பு பணிக்கு முத்து உள்ளிட்ட காவலர்கள் சென்றதாகவும், அப்போது இடிக்கப்பட்ட வீடுகளில், பெற்றோர் இல்லாத இளம்பெண்ணின் வீடும் இடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வீடுகளை இழந்த அந்தப் பெண் கதறியதைப் பார்த்து மனம் தாளாத முத்து, இப்படி மனிதாபிமானம் இல்லாத பணியில் செய்வதுடன், உதவ முடியாதவர்களாக வாழ்கிறோமே எனத் தனது நண்பர்களிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் முத்து தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகவும், தனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துள்ளதாகவும் காவல்துறை கூற ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் முத்து எழுதியுள்ள கடிதத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் காவலர்கள் தங்களின் குடும்பத்தினருடன் நேரம் செலவளிக்க முடியாத சூழல் இருப்பதாகவும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. கடிதத்தில் இருக்கும் தகவல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. 

காவல்துறை விசாரணை முடிவில் முத்து இறப்புக்கான உண்மைக் காரணம் வெளிவரும் என எதிர்பார்க்கிறார்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி காவலர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க