இரவில் பிறந்தநாள் கொண்டாடிய காவலர்; காலையில் ஐ.ஜி அலுவலகத்தில் தற்கொலை! | A policeman has committed suicide IG office

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (03/02/2019)

கடைசி தொடர்பு:11:25 (03/02/2019)

இரவில் பிறந்தநாள் கொண்டாடிய காவலர்; காலையில் ஐ.ஜி அலுவலகத்தில் தற்கொலை!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆயுதப்படை ஐ.ஜி அலுவலகத்தில் ஒரு காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

போலீஸார்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பயிற்சி முடித்துவிட்டு காவலர் பணிக்குச் சேர்ந்துள்ளார். தற்போது ஆவடி வீராபுத்தில் உள்ள சிறப்பு  காவலர் படை மூன்றாம் பிரிவில் பணியாற்றி வருகிறார். இன்று காவலர் மணிகண்டனுக்கு 26-வது பிறந்தநாள். நேற்று இரவு கீழ்பாக்கம் சிறப்பு ஆயுதப் படை தலைமை அலுவலகத்துக்கு பணிக்காக வந்துள்ளார். அங்கு சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையடுத்து தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடிய மணிகண்டன் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

காவலர் மணிகண்டன்

அலுவலகத்தின் உள்ளே இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. உடனடியாக சக காவலர்கள் ஓடிச் சென்று பார்க்கும் போது மணிகண்டன் எஸ்.எல்.ஆர் துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். பிறகு அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

காவலர் மணிகண்டனின் தற்கொலைக்கு பணிச் சுமை காரணமா அல்லது குடும்ப பிரச்னை காரணமா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளது காவல்துறை. மணிகண்டனின் இறப்பு குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னை வந்த பின்னரே அவரின் தற்கொலை தொடர்பாக ஏதேனும் முக்கிய விஷயங்கள் கிடைக்கலாம் எனவும் தற்கொலைக்கு காதல் பிரச்னையும் காரணமாக இருக்கலாம் எனவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருந்தும் உண்மையான காரணத்துக்காக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மணிகண்டனின் சொல்போனையும் காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.