கோவை மாவட்ட அ.தி.மு க அலுவலகம் முன்பு விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட டிராஃபிக் ராமசாமியை அவரது ஆதரவளார்களை வைத்தே வலுகட்டாயமாக அழைத்துச் செல்ல வைத்தது கோவை போலீஸ்.
கோவை அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது. இதற்காக அ.தி.மு.க அலுவலகமான ' இதய தெய்வம் மாளிகை' முன்பாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. அந்த ப்ளக்ஸ் பேனர்கள் விதிகளை மீறி வைக்கப்பட்டது என கோவையில் இருந்த டிராஃபிக் ராமசாமிக்கு தெரியவரவே கொதிப்போடு அ.தி.மு.க அலுவலகத்துக்கு புறப்பட்டு வந்தார்.
இந்நிலையில் ஆளும் கட்சி பேனர்களை அகற்ற மறுக்கிறார்கள். இவற்றை உடனடியாக அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்ற டிராஃபிக் ராமசாமியுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், டிராஃபிக் ராமசாமியோ தன் வாதத்தில் உறுயாக நின்றார். போலீஸாரின் சமாதானப் பேச்சுக்கு மசியாமல் அ.தி.மு.க அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை ஆரம்பித்தார். உடனடியாக விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவில்லையெனில் கோவை காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்று அதிர வைத்தார் டிராபிக் ராமசாமி.
ஆளுங்கட்சியினர் பேனரை அகற்றவும் முடியாது. டிராஃபிக் ராமசாமியை விரட்டவும் முடியாமல் செய்வதறியாது தவித்தது போலீஸ். டிராஃபிக் ராமசாமியின் போராட்டம் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நீடிக்க… அவரது ஆதரவாளர்களை எச்சரித்து டிராபிக் ராமசாமியை குண்டுக்கட்டாக அழைத்துச் செல்ல வைத்தது போலீஸ். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.