"நிர்மலாதேவி விவகாரத்தில் யார் பலிகடா தெரியுமா?"- பாதிக்கப்பட்டவர் மனைவி | New controversy in Nirmala Devi issue

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (03/02/2019)

கடைசி தொடர்பு:15:52 (03/02/2019)

"நிர்மலாதேவி விவகாரத்தில் யார் பலிகடா தெரியுமா?"- பாதிக்கப்பட்டவர் மனைவி

என் கணவருக்கு எப்போது ஜாமீன் – கண்ணீர் விடும் சுஜா !

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி, காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில் கல்லூரி  மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக ஆடியோ பதிவு வெளியாகி அதிர்ச்சியைக் ஏற்படுத்தியது.  தமிழகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இந்தநிலையில், இவ்விவகாரம் குறித்து  பேட்டியளித்திருக்கும் முருகனின் மனைவி சுஜா, "திட்டமிட்டே என் கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்திருக்கிறார்.

நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சோதனையிட்டு, வீட்டிலிருந்து கம்ப்யூட்டர், செல்போன், டைரி உட்பட பல ஆவணங்களை எடுத்துச் சென்றனர். கல்லூரி மாணவிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை என்பதால், அதனை விசாரணை செய்ய தமிழக ஆளுநரால் சந்தானம் கமிட்டி அமைக்கப்பட்டது. அரசு சார்பாக சி.பி.சி.ஐ.டி-யும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானமும் விசாரணை நடத்தினர். நிர்மலாதேவி  தொடர்பான விசாரணை கமிஷனின் விசாரணை வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையே நிர்மலாதேவி ஆடியோ தொடர்பாகக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவிப் பேராசிரியர் முருகன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து  சிறையில் இருந்துவருகின்றனர். பலமுறை ஜாமீன் கேட்டு மனு அளித்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மூலம் ஜாமீன் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், முருகனின் மனைவி அதற்கான முயற்சியைச் செய்துவருகிறார். ஆனால், அங்கு டிரெயல் கேசாககூட எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகத் தெரிகிறது.

 

நிர்மலாதேவி

 

இதுகுறித்து முருகனின் மனைவி சுஜாவிடம் பேசினோம், "என் கணவர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். ஆனால், இன்றுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. திட்டமிட்டே என் கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். யாரைக் காப்பாற்ற என் கணவருக்கு ஜாமீன் வழங்கப்படாமல் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால், அது பெரிய இடத்தில் இருக்கும் நபர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. கொலை செய்த நேரடி குற்றவாளிகளுக்குக்கூட 90 நாட்களில் ஜாமீன் கிடைத்துவிடுகிறது. ஆனால் எந்த ஒரு குற்றமும் என் கணவர் செய்யாமல் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது வேதனைக்குரியது. எனது கணவருக்கும், நிர்மலாதேவிக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று அவரே தெரிவித்துவிட்டார். இப்படியான சூழலில்கூட எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் கேட்டு மனு அளித்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கைப் பதிந்தோம். ஜனவரி 8-ம் தேதி கேஸ் ட்ரெயல் வருகிறது, 24-ம் தேதி வருகிறது, பிப்ரவரிதான் வருகிறது என்று கூறி தொடர்ந்து எங்கள் மனுவைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால், இதுவரை டிரெயலுக்குகூட எங்கள் மனு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. என் கணவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று திட்டவட்டமாக உள்ளனர். என் கணவருக்கு எந்தத் தகவலும் தெரியாது. ஆனால், அவரை வெளியேவிடாமல் குற்றத்தை அவர்மீது திசை திருப்பலாம் என்று நினைக்கின்றனர். எஸ்.பி ராஜேஸ்வரி முறையான விசாரணை செய்யவில்லை. எப்படி விசாரணை நடத்தக்கூடாது என்பதற்கு அவர் உதாரணம். என் கணவர்மீது மாணவிகளோ, நிர்மலாதேவியோ எந்தக் குற்றமும் சொல்லவில்லை. ஆனால், என் கணவருக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று ராஜேஸ்வரி நினைக்கிறார். அவர் தவறு செய்யவில்லை என்று தெரிந்துவிட்டது. என் கணவர் சிறையில் இருந்த நாட்கள் அளவுக்கு எஸ்.பி ராஜேஸ்வரியும் இருப்பாரா ?.

சுஜா

சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு நீதிமன்றம் போதிய கால அவகாசம் கொடுத்தும், ஆவணங்களைச் சமர்பிக்காமல் தாமதித்து வருகிறது. என் கணவர் தவறுசெய்து தண்டனை வழங்கப்பட்டிருந்தால்கூட இவ்வளவு நாள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கமாட்டார். தண்டனைக் காலத்துக்கு அதிகமாகவே தற்போது சிறையில் உள்ளார். எனவே, என் கணவருக்கு விரைவாக ஜாமீன் வழங்கவேண்டும். சந்தானம் கமிட்டி விசாரணையை வெளியிட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். நிம்மதி இல்லாத வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்துவருகிறேன். இரவு நேரங்களில் தூக்கம் வராமல் என் கணவரின் நினைவு வாட்டுகிறது. ஒழுங்காகச் சாப்பிட்டாரா... தூங்கினாரா என்று புலம்புகிறேன். கொசுக்கடியில் சிறையில் என்ன செய்கிறார் என்று தெரியாமல் தவிக்கிறேன். காலையில் எழுந்தவுடன் அவர் நினைவுகள் வந்தால், கண்ணீர்தான் வருகிறது. ஆனால், என் கணவரை வஞ்சித்துவிட்டு அவர்கள் தப்பிக்க வேண்டும் எனக் குறிப்பட்ட சிலர் செயல்பட்டுவருகின்றனர். நாம் வாழ்வது சுகந்திர நாடுதானா? அதிகாரத்தில் இல்லை என்றால் நியாயம் கிடைக்காதா என்று தோன்றவைக்கிறது" என்றார்.

 


டிரெண்டிங் @ விகடன்