`கருப்புக்கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி!' - நிர்மலா சீதாராமன் அதிரடி | Nirmala seetharaman participated in coimbatore bjp cadres meeting

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (03/02/2019)

`கருப்புக்கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி!' - நிர்மலா சீதாராமன் அதிரடி

``பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்’’ என்று கோவையில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பி.ஜே.பி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையை அடுத்த ஈச்சனாரியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசில் பங்குதாரர்களாக இருந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்?. அப்போதெல்லாம்  எதுவும்  செய்யாதவர்கள் இப்போது வேண்டுமென்றே கேள்வி எழுப்புகிறார்கள். தமிழக மக்கள் ஒரே ஒரு எம்.பிதான் நமக்கு கொடுத்தார்கள் என்று தமிழகத்தை பிரதமர்  ஒதுக்கிவிடவில்லை. எல்லா மாநிலங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்தவர் மோடி. தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

கடந்த 50 வருடங்களாக செய்ய முடியாத சாதனையை கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது. பெரிய பெரிய ஊழல்களை  ஒழிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் சின்னச் சின்ன ஊழல்களையும் தடுத்து நிறுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. எளிய மக்களுக்கும்  வங்கிக் கணக்கு ஆரம்பித்து அரசின் மானியங்களை நேரடியாக மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியதால் அரசின் பணம் நேரடியாக மக்களுச் சென்று சேர்ந்தது, விடுப்பே எடுக்காமல் நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் உழைக்கும் பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும்

நிர்மலா சீதாராமன்

பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது கருப்புக் கொடி காட்டுவதெல்லாம் கீழ்த்தரமான அரசியல் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு எல்லா வகையிலும் இடையூறாக இருக்கிறது தி.மு.கதான். மோடி சுயநலம் இல்லாதவர். அதனால்தான் அவரால் தைரியமாக செயல்படுகிறார். மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்

இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தென் தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை பெரும் பிரச்னையாக இருந்தது. மத்திய அரசு மீனவர் பிரச்னையை கண்டுகொள்ளாததாக விமர்சனங்கள் எழுந்தது. பிரதமர் மோடி அவர்கள் இப்போது அதற்கென தனி துறையையே ஏற்படுத்தியுள்ளார். மத்திய அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.தானும் நல்லது செய்யாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுக்கும் தி.மு.கவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க