`சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்காக 1,500 கட்டுரைகள் வந்துள்ளன!’ - சோமசுந்தரம் இளங்கோவன் | world tamil conference in america

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (03/02/2019)

கடைசி தொடர்பு:19:11 (03/02/2019)

`சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்காக 1,500 கட்டுரைகள் வந்துள்ளன!’ - சோமசுந்தரம் இளங்கோவன்

பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இதை அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.

கடந்த 1971ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சோமசுந்தரம் இளங்கோவன் என்பவர் இந்த விழாவை ஒருங்கிணைத்து நடத்துகிறார். இது பற்றி அவர் நம்மிடம் பேசும் போது, “ பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ  நகரில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அறிஞர் அண்ணா நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நான் சென்றிருந்தேன். அப்போதிலிருந்து இந்த மாநாடு மீது எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. 

அமெரிக்காவில் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது என்பது என் ஆசை. முன்னதாக 9-வது மாநாடு மலேசியாவில் நடக்கும் போது உலகத் தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் மாரிமுத்துவை சந்தித்தேன். அவரை எனக்கு 30 வருடங்களுக்கு மேலாக தெரியும். அவரை நேரில் பார்க்கும் போது அமெரிக்காவிலும் தமிழ் மாநாடு நடத்த வேண்டும்  என பேச்சுவார்த்தை நடத்தினோம் அதன் முடிவில்தான் தற்போது சிகாகோவில் மாநாடு நடைபெறவுள்ளது. 

இது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்பதோடு நிற்காமல், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 32-வது  ஆண்டு விழா, உலக தமிழ் முதலீட்டாளர்கள் மாநாடு என அனைத்தும் இணைந்து நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது. அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம்  ஆகிய மூன்று அமைப்பிலும் உள்ள உறுப்பினர்கள் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினோம்.

அதன்பின் அந்த குழுவின் தலைவராக என்னை நியமித்து விழாவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படக் கூறினார்கள். நாங்கள் அனைவரும் இணைந்து பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி விழா ஏற்பாட்டுக்கான அனைத்து விஷயங்களையும் பேசி தீர்மானித்தோம். இந்த ஆண்டு விழா முடிந்தபிறகு வெளியாகும் இதழுக்காகப் பல தலைப்புகளைத் தீர்மானித்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு அனுப்பினோம். அவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளாக சுமார் 1500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்துள்ளன. அதில் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து இதழில் வெளியிடவுள்ளோம். 

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வரவுள்ளனர். அப்படி வரும் மக்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்று நான்கு நாள்கள் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து மீண்டும் அவர்களை விமான நிலையத்தில் விடும் அளவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு மூன்று இரவுகள் தங்க 550 அமெரிக்க டாலர்களும், 5 இரவுகள் தங்க 850 அமெரிக்க டாலர்களும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்படி வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் தமிழர்களுக்கு விரைவில் விசா வழங்க வேண்டும் என சில நாட்டு தூதரகங்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.