மூளை, முதுகுத் தண்டுவடத்தை திடீரென முடக்கும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய்! | Multiple sclerosis awarness bike rally held in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/02/2019)

கடைசி தொடர்பு:18:00 (03/02/2019)

மூளை, முதுகுத் தண்டுவடத்தை திடீரென முடக்கும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய்!

திடீரென்று ஒரு நாள் எதிர்பாராத நேரத்தில் மனிதனோடு முக்கிய நரம்பியல் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிப்படைந்து, அவரால் இனி மற்றவர்களின் உதவியின்றி இயல்பாக நடக்கவே முடியாது' என்று தெரிய வந்தால் அவருடைய மனநிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கேட்பதற்குக் கற்பனையைப் போல இருந்தாலும் இதுவும் ஒருவகையான நோய் தான். இந்த நோயின் பெயர் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis) (சுருக்கமாக எம்.எஸ்) என்பார்கள். பிப்ரவரி 3 ம் தேதி 'இந்திய எம்.எஸ் தினம்' ஆகும். 

மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் விழிப்பு உணர்வுப் பேரணி

`இந்த ஸ்களீரோசிஸ் என்ற நோய் மூளை, முதுகுத்தண்டு மற்றும் கண்களில் இருக்கும் நரம்புகளைப் பாதிப்படைய செய்யும். மேலும் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக கண் பார்வை பாதிப்பு, நரம்பு செயல்பாடுகள் மற்றும் வேறுபல உடல் ரீதியான செயல்பாடுகளையும் இந்த மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் ஏற்படுத்தும். 

எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால் மனிதனின் முக்கியமான நரம்பு செயல்பாட்டைப் பாதித்து, மூளைக்குச் செல்லும் சிக்னலைத் தடுத்துவிடுகிறது. இதனால் ஒருவரால் அசையவோ, உணரவோ முடிவதில்லை. இந்த நோய் பெரும்பாலும் இளம் வயதினரையும், குறிப்பாக பெண்களையே அதிகம் தாக்குகிறது. இதில் மிகவும் கவலைக்குரிய செய்தி இந்நோயின் காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே. 

மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் விழிப்பு உணர்வுப் பேரணி

`மற்றவர்களின் உதவி இன்றி நடக்க முடியாத நிலை, சோர்வு, தசை மற்றும் நரம்பு பலவீனம், தெளிவற்ற பார்வை, குறைவான நினைவாற்றல்' ஆகியவையே இந்த நோயின் அறிகுறிகளாகும் என்று இந்த நோய் குறித்து விளக்குகிறார்கள் மல்ட்டிபிள் ஸ்களர்ரோசிஸ் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பைச் சேந்தவர்கள்.

இது பற்றிய விழிப்புஉணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் 'மல்ட்டிபிள் ஸ்களர்ரோசிஸ் சொசைட்டி ஆப் இந்தியா' மற்றும் 'சென்னை ராயல் என்பீல்ட் மோட்டார்ஸ்' சோழிங்கநல்லூர் சுங்கச்சாலையிலிருந்து மாமல்லபுரம் வரை இருசக்கர வாகனப் பேரணி (Bike Rally) நடத்தினர். 

ராஜேஷ்

இதுகுறித்து இந்த நோயால் பாதிக்கப்பட்ட ராஜேஷ் உடன் பேசினோம். ``எனக்கு இந்த நோய் 2 வருஷமாக இருக்கிறது. நோய்க்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நான் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் என்னைப் பாதிப்படையச் செய்துவிட்டது. ஆரம்பத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். பெரிதும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இப்போது இயற்கை வழியில் சிகிச்சை பெற்று வருகிறேன். சமைக்காத காய்கறிகள், பழ வகைகள், தியானம் மற்றும் யோகாசனம் என வாழ்க்கை முறையை மாற்றியதும், உடலில் சில நல்ல மாற்றங்களை உணரமுடிகிறது" என்று கூறினார். 

உங்கள் உடலில் ஏதேனும் இது மாதிரியான அறிகுறிகள் காணப்பட்டால் பதற்றம் அடையாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.