சென்னையில் பிரியாணி தகராறில் படுகொலை! - ரவுடியைத் தேடும் போலீஸ் | Chennai man killed clash over briyani

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (03/02/2019)

கடைசி தொடர்பு:07:38 (04/02/2019)

சென்னையில் பிரியாணி தகராறில் படுகொலை! - ரவுடியைத் தேடும் போலீஸ்

சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் பிரியாணி கடைக்காரர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கொலை செய்யப்பட்ட ரவி

சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடிசை மாற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(40). இவர் தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பிரியாணி கடை  நடத்தி வருகிறார். இவரின் கடையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ரேடியோ விஜி என்பவர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். அப்போது ரவியின்  கழுத்தில் கத்தியை வைத்து ரேடியோ விஜி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இந்தச் சம்பவத்தைப் பார்த்த ரவியின் உறவினர் ஒருவர் பிரியாணி  கரண்டியால் ரேடியோ விஜியை அடித்து உதைத்து தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ரேடியோ விஜியை கைது செய்து  புழல் சிறையில் அடைத்தனர். 

சிறையிலிருந்து  வெளியில் வந்த ரேடியோ விஜி தனது கூட்டாளிகளுடன் இன்று மதியம் தண்டையார்பேட்டை சேனியம்மன் தெருவில் வைத்து ரவியை வழிமறித்தார். பிறகு ரவியை அதே இடத்தில் கத்தி, அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ரவி, உயிருக்குப் போராடினார். அங்கிருந்து ரேடியோ விஜய் மற்றும் கூட்டாளிகள் தப்பி ஓடினர்.

ரவியை  மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிகிச்சை பலனளிக்காமல் ரவி உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ரேடியோ விஜி மற்றும் அவரின் கூட்டாளிகளை தேடிவருகிறார்கள். இறந்த ரவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த ரவிக்கு சுமதி என்ற மனைவியும் ராமு, நந்தினி, வெங்கடேஷ் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். பட்டப்பகலில் மக்கள் கண்முன்னால் நடந்த இந்தக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.