`சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது' - வனத்துறை அமைச்சருக்கு மனு | Petition to forest minister about Chinnathambi elephant

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (03/02/2019)

கடைசி தொடர்பு:08:06 (04/02/2019)

`சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது' - வனத்துறை அமைச்சருக்கு மனு

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது என்று இயற்கை பாதுகாப்பு சங்கத்தினர், வனத்துறை அமைச்சருக்கு மனு அளித்துள்ளனர்.

இயற்கை பாதுகாப்பு சங்கம்

கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை, கடந்த 25-ம் தேதி டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். ஆனால், சின்னத்தம்பி யானை தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி, கடந்த சில நாள்களாக சுற்றி வருகிறது. சுமார், 80 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சின்னத்தம்பியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சின்னத்தம்பி யானை தொடர்ந்து வனப்பகுதிக்குச் செல்லாமல் இருப்பதால், அதை கும்கியாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஏற்கெனவே, தன் வாழ்விடத்தைத் தேடி வரும் சின்னத்தம்பியை, கூண்டில் அடைத்து, மன அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று கூறப்பட்டது. சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது. அவனை மீண்டும் தடாகம் பகுதியிலேயே விட வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில், சமூக ஆர்வலர்கள், ஆனைக்கட்டி பழங்குடி மக்கள், தடாகம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னத்தம்பி யானை

இந்த நிலையில், யானைகளை பாதுகாப்பது தொடர்பாக, இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனை நடந்தது. இதில், சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, `சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். மேலும், சின்னத்தம்பியை முதுமலைப் பகுதியில் இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு நல்ல சூழலும், காட்டு யானைகளும் இருப்பதால் சின்னத்தம்பிக்கு அங்கு நல்ல வாழ்விடம் கிடைக்கும்' என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு, இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.