`பிரிண்டிங் கடைக்காரருக்குக் கொலை மிரட்டல்?’ - வேலூர் சிம்பு ரசிகர் மன்றத் தலைவர் கைது | vellore Simbu fans association leader arrested

வெளியிடப்பட்ட நேரம்: 00:32 (04/02/2019)

கடைசி தொடர்பு:08:16 (04/02/2019)

`பிரிண்டிங் கடைக்காரருக்குக் கொலை மிரட்டல்?’ - வேலூர் சிம்பு ரசிகர் மன்றத் தலைவர் கைது

``பேட்ட-விஸ்வாசம் படங்களின் பேனர்களை கிழித்துவிட்டு, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படப் பேனரை வைப்பேன். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்’’ என்று சவால்விட்டு ரஜினி-அஜித் ரசிகர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்பட்ட, சிம்பு ரசிகர் மன்ற வேலூர் மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிம்புவுடன் மச்சிமதன்

நடிகர் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், திரைக்கு வந்துள்ளது. பட ரிலீஸுக்கு முன்பு, ``இதுவரைக்கும் வைக்காத அளவுக்கு எனக்குப் பேனர் வைங்க, பால் பாக்கெட்ல ஊத்தாதீங்க... அண்டாவுல பால் ஊத்துங்க’’ என்று சிம்பு கூறி வீடியோ வெளியிட்டார். சிம்புவின் பேச்சு விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிம்பு ரசிகர் மன்றத்தின், வேலூர் மாவட்டத் தலைவராக உள்ள மச்சிமதன் என்கிற மதன்குமார் (27), ரசிகர்கள் சிலருடன் சேர்ந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் ரிலீஸுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ``பேட்ட, விஸ்வாசம் படங்கள் இன்னும் ஓடுகிறது. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ரிலீஸ் பண்ண மாட்டோம் என்று தியேட்டர் ஓனருங்க சொல்றாங்க. எவன் தடுத்தாலும் எங்க தலைவர் சிம்பு படத்தை ஓட்டனும். தியேட்டர்கள் முன்பு வைத்திருக்கிற பேட்ட, விஸ்வாசம் படங்களின் பேனர்களைக் கிழித்துவிட்டு, `வந்தா ராஜாவாதான் வருவேன்' பட பேனரை வைப்பேன். முடிந்தால் தடுத்துப்பாருங்கள். சிங்கத்தோடு மோது, சிம்பு ரசிகர்களிடம் மோதாதே’’ என்று சவால்விடுத்திருந்தார்.

மச்சிமதன்

அதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை நவல்பூரில் ஹரிகுமார் (25) என்பரின் டிஜிட்டல் பேனர் கடைக்கு ஆதரவாளர்களுடன் சென்ற மச்சிமதன், ``சிம்புவின் பேனரை உடனே பிரிண்ட் செய்து கொடுக்குமாறு’’ கேட்டுள்ளார். உடனே எப்படி முடியும் என்று கடை உரிமையாளர் கூறியதற்கு, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மச்சிமதனே அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பெரும் சர்ச்சையை இந்த வீடியோக்கள் ஏற்படுத்தின. ரஜினி-அஜித் ரசிகர்கள், மச்சிமதனை கண்டிக்க, அதற்கு, ``என் அப்பா ரஜினி ரசிகர். என் அண்ணன் அஜித் ரசிகர். நான் கடவுளாக மதிக்கும் தலைவர் சிம்பு கூட ரஜினி-அஜித் ரசிகர் தான். நான் யாரையும் துன்புறுத்த அப்படிப் பேசவில்லை’’ என்று மச்சிமதன் கூறிய மூன்றாவது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இதனிடையே, கொலை மிரட்டல் விடுத்ததாக, மச்சிமதன் மீது ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில், பிரிண்ட்டிங் கடை உரிமையாளர் புகார் அளித்தார். போலீஸார், வீடு புகுந்து சிம்பு ரசிகர் மன்ற மாவட்டத் தலைவரான மச்சிமதனை கைது செய்தனர்.

டி.ஆருடன் மச்சிமதன்

இந்த நிலையில், மச்சிமதன் பேசிய நான்காவது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகின. அதில், ``பேனர் பிரிண்டிங் உரிமையாளர் என் ஃபிரண்ட்டு தான். சிம்பு பட பேனரை பிரிண்ட் செய்து தரமுடியாது என்று அவர் கூறினார். அதனால், நண்பன் என்ற முறையில் நான் அங்கு சென்று சத்தம்போட்டேன். இனிமேல் அந்த மாதிரி நான் செய்ய மாட்டேன்’’ என்று கூறியிருந்தார். இவரின் நடவடிக்கை, வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ``மச்சிமதன், ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சாமிநகரில் வசிக்கிறார். இவரின் தந்தை அயர்ன் கடை வைத்திருக்கிறார். சமீபத்தில், மச்சிமதனுடன் ஏற்பட்ட தகராறில் அவரின் மனைவி, குழந்தையைத் தூக்கிக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது, குழந்தையைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. நான் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று இருக்கிறேன் என்று கூறி ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டவர். மச்சிமதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் உறுப்பினராக இருக்கிறார். சமூக வலைதளங்களில் அடிக்கடி இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர். அடிதடி வழக்குகளும் இவர் மேல் இருக்கிறது’’ என்றனர் போலீஸார்.