`கட்டுப்பாட்டை இழந்த கார்' - ஒரே கம்பெனியைச் சேர்ந்த என்ஜினீயர்கள் 4 பேர் உயிரிழப்பு! | road accident occurred in Cuddalore Vepur and four persons died

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/02/2019)

கடைசி தொடர்பு:08:38 (04/02/2019)

`கட்டுப்பாட்டை இழந்த கார்' - ஒரே கம்பெனியைச் சேர்ந்த என்ஜினீயர்கள் 4 பேர் உயிரிழப்பு!

வேப்பூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் என்ஜினீயர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் நவீன்சாமுவேல் (35). இவர் பொறியியல் பட்டதாரி. அதே பகுதியில்  சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் பூபதி மேலும் 4 பேர் உட்பட நண்பர்கள் 5 பேரும் காரில் சென்னையிலிருந்து திருச்சிக்குச் சென்றுள்ளனர். பின்னர் மாலை அதே காரில் சென்னை புறப்பட்டுள்ளனர். இந்த கார் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே கழுதூர் என்ற இடத்தில் இரவு வந்தபோது காரின் முன் பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி சாலையின்  மறுபுறம் ஓடத் துவங்கியுள்ளது. அந்தச் சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்து

இதில் பலத்த காயமடைந்த  நவீன்சாமுவேல், பூபதி உட்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார். மற்றொரு காரில் வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37), ராஜாபதி (43), சரவணபெருமாள், சுந்தர்ராஜன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த ராஜபதி, பாலகிருஷ்ணன், என்ஜினீயர் ஒருவர் ஆகியோரைச் சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சுந்தர்ராஜன், சரவணபெருமாள் ஆகியோரைத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து உயிரிழந்த 4 என்ஜினீயர்களின் உடல்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

வேப்பூர் விபத்து

விபத்தில் காயமடைந்த சுந்தர்ராஜன் பரமகுடி வட்டாட்சியராகவும், சரவணப்பெருமாள் பரமக்குடி வருவாய் ஆய்வாளராகவும் உள்ளனர். வருவாய் ஆய்வாளர் சரவணப்பெருமாள் வாங்கிய புதிய காரில் திருவண்ணாமலை சென்றுவிட்டு ஊர் திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பலியான 2 என்ஜினீயர்கள் யார் மற்றும் படுகாயமடைந்த என்ஜினீயர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.