`காட்டை உருவாக்கும் யானை கூண்டில், அழிக்கும் மனிதன் நாட்டில்' -சின்னத்தம்பிக்காக வைக்கப்பட்ட பேனர்! | Coimbatore: Banners to support Chinnathambi

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (04/02/2019)

கடைசி தொடர்பு:10:50 (04/02/2019)

`காட்டை உருவாக்கும் யானை கூண்டில், அழிக்கும் மனிதன் நாட்டில்' -சின்னத்தம்பிக்காக வைக்கப்பட்ட பேனர்!

சின்னத்தம்பி யானைக்கு ஆதரவு தெரிவித்து, கோவையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சின்னத்தம்பி

கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை, கடந்த 25-ம் தேதி டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். ஆனால், சின்னத்தம்பி யானை தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி, கடந்த சில நாள்களாக சுற்றி வருகிறது. சுமார், 80 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சின்னத்தம்பியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சின்னத்தம்பி யானை தொடர்ந்து வனப்பகுதிக்குச் செல்லாமல் இருப்பதால், அதை கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஏற்கெனவே, தன் வாழ்விடத்தைத் தேடி வரும் சின்னத்தம்பியை, கூண்டில் அடைத்து, மன அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று கூறப்பட்டது. சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது. அவனை மீண்டும் தடாகம் பகுதியிலேயே விட வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில், சமூக ஆர்வலர்கள், ஆனைக்கட்டி பழங்குடி மக்கள், தடாகம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சின்னத்தம்பி யானைக்கு ஆதரவு தெரிவித்து, ஆனைக்கட்டி அருகே பழங்குடி மக்களும், இளைஞர்களும் பேனர் வைத்துள்ளனர்.

சின்னத்தம்பி

அதில், காடுகளை அழிக்கும் மனிதர்கள் நாட்டில். காடுகளை உருவாக்கும் யானைகள் கூண்டில். மனிதர்கள் செய்யும் குற்றத்துக்கு சின்னத்தம்பிக்கு தண்டனையா... சின்னத்தம்பியை வாழவிடுங்கள். #SaveChinnathambi" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.