மஹோதன்ய புண்ணிய தை அமாவாசை -ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்! | Thousands of pilgrims in Rameswaram on the occasion of thai amavasai.

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (04/02/2019)

கடைசி தொடர்பு:12:27 (04/02/2019)

மஹோதன்ய புண்ணிய தை அமாவாசை -ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்!

மஹோதன்ய புண்ணிய தை அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுத்தனர்.

தை அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்
 

நாடு முழுவதும் உள்ள இறை நம்பிக்கை கொண்ட இந்துக்கள் அமாவாசை தினங்களில் மறைந்த தங்கள் முன்னோர்கள் நினைவாகப் புனித நீராடி வழிபடுவது வழக்கம். இதில் தை, மாசி, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பெருமளவிலான இந்துக்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நீர் நிலைகளுக்குச் சென்று நீராடுவதைக் கடமையாக கொண்டுள்ளனர்.
 
உத்ராயணம் எனப்படும் தை மாதம், திங்கட்கிழமை, திருவோண நட்சத்திரம், வெதிபாத நாமயோகம், அமாவாசை ஆகிய ஐந்தும் ஒன்று சேர்ந்து வரக் கூடிய தினம் மஹோதன்ய புண்ணிய அமாவாசை தினம் என அழைக்கப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய அமாவாசை வருகிறது. இந்த நாளில் மற்ற நீர் நிலைகளில் குளிப்பதை விடக் கடல்களில் குளிப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது. அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கடல்கள் இணையும் பகுதிகளில் குளிப்பது மேலும் விசேடம் வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. சோழர் காலம் தொட்டு கடைப்பிடிக்கப்படும் இந்த விசேச தினத்தில் நீராடுவதன் மூலம் முன்னோர்கள் திருப்தி அடைவதுடன், வம்ச விருத்தியும் ஏற்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

அத்தகைய விசேடத் தை அமாவாசை தினமான இன்று நாடு முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். இதனைத் தொடர்ந்து மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து திதி கொடுத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து தங்கள் அமாவாசை விரதத்தினை முடித்தனர்.

தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்

இதனைத் தொடர்ந்து பகல் 11 மணியளவில் அருள்மிகு ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தத்திற்கு சென்று பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கினர். இதன் பின் கடற்கரையில் சுவாமி அம்மனுக்கு  சிறப்பு தீபாராதனை நடந்தது. கோயிலில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் கீழ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் காவல் துறையினர் மேற்கொண்டிருந்தனர். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், சேதுக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.