44 ரூபாய் சில்லறை கொடுக்காமல் ஒருமையில் பேசிய சென்னை மாநகர நடத்துநர்! - கண்ணீர்விட்டு அழுத பெண் பயணி  | chennai government bus conductor

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (04/02/2019)

கடைசி தொடர்பு:13:50 (04/02/2019)

44 ரூபாய் சில்லறை கொடுக்காமல் ஒருமையில் பேசிய சென்னை மாநகர நடத்துநர்! - கண்ணீர்விட்டு அழுத பெண் பயணி 

ஐம்பது ரூபாய் கொடுத்து ஆறு ரூபாய் டிக்கெட் வாங்கிய பெண் பயணிக்கு சேஞ்ச் கொடுக்காமல் ஒருமையில் பேசி அவரை அழவைத்துள்ளார் சென்னை மாநகர அரசுப் பேருந்து நடத்துநர். தட்டிக்கேட்ட பிற பயணிகளை ஒருமையில் பேசியதால் நடத்துநருக்கும் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பயணியை வீடியோ எடுக்கும் கண்டக்டர்

இந்தச் சம்பவம் குறித்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், ``சென்னை பிராட்வேயில் இருந்து இன்று காலை 9.15 மணிக்கு மந்தவெளிக்கு அரசுப் பேருந்து (எண் 21) புறப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் ஏறினர். நடத்துநர் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, இளம்பெண் ஒருவர் அருகில் இருந்த பெண்ணிடம் 50 ரூபாய் கொடுத்து 6 ரூபாய் டிக்கெட் கேட்டார். ஆறு ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்த நடத்துநர் மீதி பணம் 44 ரூபாய் கொடுக்கவில்லை. பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டார். டிக்கெட் வாங்கிக்கொடுத்த பெண்ணும் பல்லவன் சாலை பேருந்து நிலையத்தில் இறங்கிச் சென்றுவிட்டார். இதனால் செய்வதறியாது இருந்த அந்த இளம்பெண், 44 ரூபாய் சில்லறை கொடுங்க என்று நடத்துநரிடம் கேட்டார். ஆனால், நடத்துநர் கண்டுகொள்ளாமல் முன்பகுதிக்கு டிக்கெட் கொடுக்கச் சென்றுவிட்டார்.

பேருந்தில் பின்னாடி நின்றுக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணும் நடத்துநரிடம் சென்று சில்லறை கேட்டார். அப்போது, அந்தப் பெண்ணை நடத்துநர் ஒருமையில் பேசி சில்லறை அப்புறம் தாரேன் என்று கடிந்துகொண்டார். சகபயணிகள் முன் நடத்துநர் அப்படிப் பேசியதால், அந்தப் பெண் அழுதுவிட்டார். வேதனையில் பின்னாடி வந்துவிட்டார். பேருந்தில் பயணித்த மற்றப் பயணிகள்,  மீத சில்லறை கொடுக்க வேண்டியதுதானே. ஏன் அந்தப் பெண்ணை அழவைத்தீங்க என்று நடத்துநரிடம் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துநர், அந்தப் பயணிகளை தகாதவார்த்தையில் திட்டினார். இதனால் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசும் கண்டக்டர்

சிம்சன் பேருந்து நிலையத்தில் 15 நிமிடம் பேருந்து நிறுத்தப்பட்டது. வேலைக்குச் செல்லும் பயணிகள், வண்டியை எடுங்கள் என்று சத்தம் போட்டதால் பேருந்தை டிரைவர் எடுத்தார். அப்போது, விசில் அடித்து பேருந்தை நடத்துநர் நிறுத்திவிட்டார். பின்னர் பயணிகள் சத்தம்போடவே பேருந்தை டிரைவர் எடுத்தார். சகபயணிகள் சத்தம்போடவே 44 ரூபாய் சில்லறையை அந்த இளம்பெண்ணுக்கு நடத்துநர் கொடுத்தார். இப்படிப்பட்ட நடத்துநரால் நாங்கள் வேலைக்குச் செல்வது மிகவும் தாமதமாகிவிட்டது" என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இதனிடையே, நடத்துநரின் செயலை வீடியோ எடுத்த பயணியை கெட்டவார்த்தையால் திட்டினார். `நானும் வீடியோ எடுக்கிறேன்' என்று கூறி நடத்துநரும் வீடியோ எடுத்தார். `உன் மீது போலீஸில் புகார் கொடுக்கப்போகிறேன்' என்று நடத்துநர் சொல்ல, பதிலுக்கு அந்தப் பயணி, ``உங்கள் மீது அரசுப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரிடம் புகார் கொடுக்கப்போகிறேன்" என்றார்.

பயணியை நோக்கி கைநீட்டி வசைபாடும் கண்டக்டர்

சென்ட்ரலில் இருந்து ராயப்பேட்டை, ஆனந்த் வழியாக செல்லும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். சில நேரங்களில் கூட்டம் இல்லாமலும் பேருந்துகள் வரும். கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பல்லவன் சாலையில் பேருந்தை நிறுத்தி நடத்துநர்கள்  டிக்கெட் போடுவார்கள். 10 முதல் 15 நிமிடங்கள் பேருந்து நிறுத்தப்படுவதால் வேலைக்குச் செல்லும் பயணிகள், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. 

அதோடு, டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை கொடுக்காமல் சில நடத்துநர்கள் இருந்துவிடுகிறார்கள். கேட்டுகேட்டுப் பார்த்துப் பயணிகள் நொந்துபோய் சென்றுவிடுகிறார்கள். ``பெண் பயணிகளிடம் தகராத முறையில் நடக்கும் நடத்துநர்கள், சில்லறை கொடுக்க மறுக்கும் நடத்துநர்கள் மீது அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பது பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.