`சின்னத்தம்பியை மீண்டும் கோவைக்கு கொண்டு வர வேண்டும்!’ - கலெக்டரிடம் ஆர்வலர்கள் மனு | Petition gave to Coimbatore Collector about Chinnathambi elephant

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (04/02/2019)

கடைசி தொடர்பு:14:40 (04/02/2019)

`சின்னத்தம்பியை மீண்டும் கோவைக்கு கொண்டு வர வேண்டும்!’ - கலெக்டரிடம் ஆர்வலர்கள் மனு

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றாமல் தடாகம் பகுதியிலேயே விடவேண்டும் என்று வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சின்னத்தம்பி


கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை விளைநிலங்களைச் சேதப்படுத்துவதாகக் கூறி, கடந்த மாதம் டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இடமாற்றம் செய்த சில நாள்களிலேயே, சின்னத்தம்பி தன் வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி, சின்னத்தம்பி அலைந்து வருகிறது. இதனிடையே, சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆனைக்கட்டி பழங்குடிகள், தடாகம் பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து சின்னத்தம்பி பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சின்னத்தம்பி

இந்நிலையில், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது. அந்த யானையை மீண்டும் அதன் வாழ்விடமான தடாகம் பகுதியில் விட வேண்டும். அந்தப் பகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் செங்கல் சூளை நிர்வாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதில், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, சத்தியமங்கலம், புதுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.