`ஹைதராபாத் போய்ட்டு வருவதற்குள் தங்கம், வைரம் என எல்லாமே போச்சு!' - கதறும் வங்கி அதிகாரி மனைவி | Robbers loot diamond and gold from Chennai bank officer's house

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (04/02/2019)

கடைசி தொடர்பு:15:25 (04/02/2019)

`ஹைதராபாத் போய்ட்டு வருவதற்குள் தங்கம், வைரம் என எல்லாமே போச்சு!' - கதறும் வங்கி அதிகாரி மனைவி

கொள்ளை நடந்த வங்கி அதிகாரி பங்களா வீடு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வங்கி அதிகாரி குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றபோது பங்களா வீட்டிலிருந்த வைர, தங்கம் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளை போனது. இந்தச்  சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் (51) இவர்  தரமணியில் உள்ள  தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறார். இவர், குடும்பத்துடன் ஹைதராபாத்துக்குச் சென்றார். பிறகு இன்று அதிகாலை அவர்கள் வீடு திரும்பினர். வீட்டுக்குள் நுழைந்த சுனில்குமாருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. 

பின்புறத்தில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. அதோடு லாக்கரில் இருந்த தங்கம், வைர நகைகள், ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன. இதனால் கானத்தூர் காவல் நிலையத்துக்கு சுனில்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.  சுனில்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதனால் நீண்ட நாள்களாக நோட்டமிட்டு காரியத்தை கச்சிதமாக திட்டமிட்டு கொள்ளையர்கள் முடித்துள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். சுனில்குமாருக்கு தெரிந்தவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. 

கொள்ளை நடந்த வங்கி அதிகாரி வீடு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` சுனில்குமார் குடியிருக்கும் பங்களா வீட்டின் பின்புறத்தில் சிசிடிவி கேமரா இல்லை. இதனால் அவ்வழியாக கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இருப்பினும் சுனில்குமார் வீட்டின் பின்புறத்தில் உள்ள இன்னொரு வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது. அதை வைத்து அவர்கள்  யார் என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுத்துவருகிறோம். வீட்டுக்குள் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் 80,000 ரூபாயையும் எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து எங்களுக்கு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும், மோப்ப நாயும் வீட்டிலிருந்து மெயின் ரோடு வரை சென்றுவிட்டுத் திரும்பியது. அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள், செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துவருகிறோம். இதனால் கொள்ளையர்களை விரைவில் பிடித்துவிடுவோம்"என்றனர். 

நகைகளை இழந்த அமிர்தா கூறுகையில், ``நாங்கள் குடும்பத்துடன் ஹைதராபாத்துக்குச் சென்றிருந்தோம். வீட்டின் லாக்கரில் தங்கம், வங்கி அதிகாரிவைர நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை வைத்திருந்தோம். எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். வங்கி லாக்கரின் சாவியையும் காணவில்லை. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். போலீஸார் வந்து விசாரித்துவிட்டு சென்றபிறகுதான் என்னென்ன கொள்ளை போய் உள்ளது என்று பீரோ மற்றும் லாக்கரைத் பார்த்தேன். என்னுடைய வைர வளையல்கள், நகைகள் என எல்லாமே போச்சு" என்றார் சோகத்துடன். 

 கானத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்துவருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்தான் பெண் விவிஐபி காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அதில் 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மீண்டும் அடுத்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, இரவு நேர ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், கொள்ளை நடந்த வீடு அமைந்துள்ள பகுதியில் செல்வந்தர்கள் அதிகம் குடியிருக்கின்றனர். சுனில்குமார் பங்களா வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.