கடலில் நீராடிய ஸ்தல சயன பெருமாள்! - மாமல்லபுரத்தில் குவிந்த பக்தர்கள் | magodhaya theerthavari in mamallapuram sthalasayana perumal temple

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (04/02/2019)

கடைசி தொடர்பு:15:55 (04/02/2019)

கடலில் நீராடிய ஸ்தல சயன பெருமாள்! - மாமல்லபுரத்தில் குவிந்த பக்தர்கள்

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் மஹோதன்ய தீர்த்த வாரி இன்று விமர்சையாக நடைபெற்றது. பல வருடங்களுக்கு ஒருமுறையே இந்த தீர்த்தவாரி நடைபெறும் என்பதால், பக்தர்கள் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு புனித நீராடினார்கள்.

மாமல்லபுரத்தில் குவிந்த புகார்

108 திவ்ய தேசங்களில் 63-வது திவ்ய தேசமாக மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயில் அழைக்கப்படுகிறது. திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பணையின் மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். ஆனால், கடல் மல்லையில், வெறும் தரையில் சயனித்தபடி பக்தர்களுக்கு திருமால் அருள்புரிந்து வருகிறார். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கடற்கரை கோயிலில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாகக் காட்சியளிக்கிறார்கள்.  கடற்கரை கோயில் சிதிலமடைந்த நிலையில், 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குச மன்னன், ஊரின் மத்தியில் கோயிலை எழுப்பி வழிபாடு நடத்தத் தொடங்கினார்.

கடலில் நீராடும் பக்தர்கள்

திருமால், உபதேச முத்திரையுடன் வலது கையை மார்பின்மீது வைத்தபடி ஆதிசேஷன்மீது கடல் மல்லையில் பள்ளிகொண்டிருக்கும் காட்சியை `தல சயனம்’ என்பார்கள். இங்கு, மூலவரே `ஸ்தல சயனப் பெருமாள்’ என்றுதான் அழைக்கப்படுகிறார். புண்டரீக மகரிஷிக்குக் காட்சியளித்ததைப்போலவே தரையில் படுத்து, பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார். ஸ்தல சயனப் பெருமாளை வணங்கினால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை, திங்கள் கிழமை, திருவோணம் நட்சத்திரம் ஆகிய மூன்றும் சேர்ந்து வரும் நாளில் மஹோதன்ய தீர்த்தவாரி நடைபெறும். பல வருடங்களுக்கு ஒருமுறைதான் இந்த மூன்றும் ஒருசேர அமையும் என்பது சிறப்பு. மஹோதன்ய தீர்த்தவாரியில் ஸ்தல சயன பெருமாள் கடலில் இறங்கி நீராடுவதைக் காண சுற்றுவட்டார கிராம மக்கள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். ஸ்தல சயன பெருமாள் மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆதிவராக பெருமாள் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இருவரும் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்று கடலில் இறங்கி நீராடினார்கள். சுவாமி நீராடியபிறகு பக்தர்கள் கடலில் இறங்கி நீராடி வழிபட்டனர். முன்னோருக்குத் திதி கொடுக்காதவர்கள் இன்று திதி கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க