வனத்துக்குள் தண்ணீர் பைப்புகள்! - கண்டும் காணாததுபோல இருக்கும் வனத்துறை | Water theft from rivers in Theni district forests

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (04/02/2019)

கடைசி தொடர்பு:16:55 (04/02/2019)

வனத்துக்குள் தண்ணீர் பைப்புகள்! - கண்டும் காணாததுபோல இருக்கும் வனத்துறை

கோடைக்காலம் நெருங்குவதால், ஆற்றில் தண்ணீர் திருடுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். இந்நிலையில், ஆறு உருவாகும் வனப்பகுதிக்குள்ளே பைப்புகள் அமைத்துத் தண்ணீர் திருடுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தேனியைச் சேர்ந்த, பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர், “தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்குத்தொடர்ச்சிமலை தேவதானப்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லாறு, கும்பக்கரை, செலும்பு அருகே உள்ள வனப்பகுதியில்,        3 முதல் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால், மலையில் உற்பத்தியாகும் ஓடையில், 100-க்கும் மேற்பட்ட பைப்புகள் மூலம் நீர் எடுக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள பெரும் முதலாளிகளின் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் தண்ணீர்

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருக்கும் அந்த விவசாயப் பகுதிகளுக்காகத் தண்ணீர் திருடப்படுவதால், மலை அடிவாரம் மற்றும் சமவெளிப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். மேலும், கோடைக்காலம் வர இருப்பதாலும், மஞ்சலாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர் மட்டம் குறைந்துகொண்டே இருப்பதாலும், வனத்திற்குள் நடக்கும் சட்ட விரோத தண்ணீர் திருட்டை வனத் துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனே தடுத்துநிறுத்த வேண்டும்” என்றார்.

தண்ணீர் குழாய்

நீர்நிலைகளில் தண்ணீர் திருடப்படுவதுகுறித்து துணை ஆட்சியர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் மாவட்ட ஆட்சியர். அக்குழு என்ன செய்கிறது என்ற கேள்வி ஒரு புறம் என்றால், வனத்துக்குள் நடக்கும் தண்ணீர் திருட்டு, வனத்துறைக்குத் தெரியாமல் நடக்குமா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தொடரும் தண்ணீர் திருட்டினால், வனத்துக்குள் இருக்கும் அந்த ஓடைகளை நம்பியுள்ள வன விலங்குகளும், மலை அடிவாரத்தில், சமவெளிகளில் இருக்கும் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.