``வாழ்வதைவிட சாவதே மேல்!' - கந்துவட்டிக்காரர் கொடுமையால் கலெக்டர் ஆபீஸில் பெண் கண்ணீர் | Virudhunagar woman files Exorbitant Interest complaint to District collector

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (04/02/2019)

கடைசி தொடர்பு:17:40 (04/02/2019)

``வாழ்வதைவிட சாவதே மேல்!' - கந்துவட்டிக்காரர் கொடுமையால் கலெக்டர் ஆபீஸில் பெண் கண்ணீர்

`'கந்துவட்டிக் கொடுமையில் வாழ்வதைவிட, சாவதே மேல்'' என பாதிக்கப்பட்ட பெண், ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கந்துவட்டி

விருதுநகர் மாவட்டம், புல்லக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் முனியம்மாள். நகராட்சி துப்புரவுப் பணியாளராக இருந்த இவரது கணவர் முனியாண்டி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில் தானும், தன் குடும்பத்தினரும் கந்துவட்டிக்காரர்களால் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் குடும்பத்தினரோடு மனு அளித்தார்.

இதுகுறித்து முனியாண்டி மகள் மாரியம்மாள் கூறும்போது, `எங்கள் தந்தை விருதுநகர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தார். அப்போது, திருமணச் செலவுக்காக விருதுநகரைச் சேர்ந்த முருகவேல் என்பவரிடம் இருந்து 2015-ம் ஆண்டு ரூ.1.25 லட்சம் கடன் வாங்கினார். அப்போது, வங்கி ஏடிஎம் அட்டை, சம்பளப் புத்தகம் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்ட முருகவேல், புரோநோட், பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கினார். மாதா மாதம் ஏடிஎம்மில் இருந்து முருகவேலே பணம் எடுத்துக்கொள்வார். வாங்கிய கடனை வட்டியும், முதலும் சேர்ந்துக் கட்டிவிட்டார். ஆனால், எங்களிடம் வாங்கிய ஆவணங்களைத் தரவில்லை. தற்போது, மேலும் ரூ. 3 லட்சம் பணம் வேண்டும் எனக் கூறுகிறார். எங்கள் தந்தை இறந்த அடுத்த நாளே, வீட்டுக்கு வந்த அவர், சாதிப் பெயர் சொல்லி எங்கள் அம்மாவை மிரட்டினார் எனத் தெரிவித்தார்.

கந்துவட்டி

என் கணவர் வாங்கிய பணத்தை வட்டியோடு சேர்த்துக் கொடுத்துவிட்டோம். ஆனாலும் என்னையும், என் பிள்ளைகளையும் தொடர்ந்து மிரட்டிவருகிறார். முருகவேலிடம் இருந்து என் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களால் நிம்மதியாக வாழமுடியவில்லை. இவ்வளவு தொந்தரவுகளுக்கு மத்தியில், உயிரோடு இருப்பதைவிட இறப்பதே மேல் என்ற முடிவில் நாங்கள் இருக்கிறோம். எனவே, உடனடியாக கந்துவட்டிக்காரரிடம் இருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தானும், தன் குடும்பத்தினரும் உயிரிழப்பதைத் தவிர வேறு வழியில்லை'' என அவர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அப்போது, முனியாண்டியின் குடும்பத்தினர் கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்துகொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆனால், அவரைத் தடுத்த காவல்துறையினர், 'காவல் நிலையத்துக்குதான் மனு கொடுக்க வர வேண்டும். இங்கே வரக் கூடாது' என்று தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.