தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் நாடாளுமன்றத் தேர்தலில் பலனளிக்குமா? #VikatanInfographics | Change of TNCC President will benefit the party in coming parliament elections?

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (04/02/2019)

கடைசி தொடர்பு:17:23 (04/02/2019)

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் நாடாளுமன்றத் தேர்தலில் பலனளிக்குமா? #VikatanInfographics

கே.எஸ். அழகிரியைப் பொறுத்தவரை தி.மு.க-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அவர், ஏற்கெனவே சட்டசபை உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்பதால், `வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்னையும் இருக்காது என தி.மு.க. கருதியிருக்கக்கூடும்' என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் நாடாளுமன்றத் தேர்தலில் பலனளிக்குமா? #VikatanInfographics

`` `தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார்' என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். வரும் மக்களவைத் தேர்தலின்போதும் நான்தான் தலைவராக இருப்பேன்’’ என்று ஜனவரி 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் சு.திருநாவுக்கரசர். அவர் அவ்வாறு பேசிய 10 நாள்களில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரை மாற்றியிருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்குப் பொதுத்தேர்தல் அறிவிப்பு, இன்னும் ஒரு மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்கிற சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.எஸ். அழகிரியை புதிய தலைவராக நியமித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான 67 வயதான கே.எஸ். அழகிரி, கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் வெற்றிபெற்றவர். அதற்கு முன்பாக இரண்டுமுறை தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்தவர். 1991-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பிலும், 1996-ம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார்.

கே.எஸ். அழகிரி

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, மோசமான தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதற்குப் பொறுப்பேற்று அப்போதைய மாநிலத் தலைவராக இருந்த ஈ.வி.கே.ஸ். இளங்கோவன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு சு. திருநாவுக்கரசர் நியமிக்கப்படுவார் எனச் செய்திகள் வெளியானபோதே, பல்வேறு தரப்பிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. `பி.ஜே.பி-யில் இருந்த ஒருவர், முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் பதவி வகித்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராவது சரியல்ல' என்ற சர்ச்சைகளும் பரவின. `திருநாவுக்கரசருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கக் கூடாது' என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள், அப்போது டெல்லி சென்று காங்கிரஸ் தலைமையிடம் மனு அளித்தனர். என்றாலும் அதை எல்லாம் மீறி, தமிழக காங்கிரஸின் தலைவரானார் திருநாவுக்கரசர். 

மேலும் மாநிலத் தலைவர் பொறுப்பேற்ற பின்னரும் கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். `மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் தனிச்சையாகச் செயல்படுகிறார்' என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டது. அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகத் திருநாவுக்கரசர் செயல்படுவதாகவும், தி.மு.க-வை கழற்றிவிட்டு, தினகரனுடன் கூட்டணி வைக்கத் திட்டம் போடுவதாகவும் பரவலாகச் செய்திகள் வெளியாகின. இதனால், தி.மு.க-வின் வெறுப்பையும் சம்பாதித்தார் திருநாவுக்கரசர். இந்நிலையில்தான் திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில் தி.மு.க-வுக்கும் பங்கு இருக்கலாம் என்கிற செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. 

திருநாவுக்கரசர் திமுக

கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஏழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அடிக்கடி மாற்றுவது அந்தக் கட்சிக்குப் புதிதல்ல என்றாலும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்த மாற்றம் நடைபெற்றிருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 தமிழக காங்கிரஸ் தலைவர்

கே.எஸ். அழகிரியைப் பொறுத்தவரை தி.மு.க-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அவர், ஏற்கெனவே சட்டசபை உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்பதால், `வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்னையும் இருக்காது என தி.மு.க. கருதியிருக்கக்கூடும்' என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும், உள்கட்சிப் பூசல்கள், கோஷ்டி மோதல்களுக்கு மிகவும் பெயர்பெற்ற தமிழக காங்கிரஸின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. 

``அழகிரி எடுக்கும் முடிவுகளுக்கு, மாநில காங்கிரஸில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு செயல் தலைவர்களும் சம்மதம் தெரிவித்து, அனுசரித்துப் போவார்களா? நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி மாற்றம் எவ்வாறு எதிரொலிக்கும்?" என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்