`சின்னத்தம்பி யானை விவகாரம்!' - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு | Chinna thambi Issue TN Government reply to Chennai HC

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (04/02/2019)

கடைசி தொடர்பு:16:54 (04/02/2019)

`சின்னத்தம்பி யானை விவகாரம்!' - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

சின்னத்தம்பி

கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை, விளைநிலங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, கடந்த மாதம் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம்   செய்தனர். ஆனால், சின்னத்தம்பி யானை அங்கிருந்து வெளியேறி, தனது வாழ்விடத்தை நோக்கி வரத்தொடங்கியது. பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலைப் பகுதிகளில் யானை சுற்றிவருகிறது. யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சின்னத்தம்பியைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. சின்னத் தம்பியோ, கும்கி யானைகளுடன் விளையாடிவருகிறது. இதனால், வனத்துறையினர் செய்வதறியாமல் தவித்துவருகின்றனர்.

காட்டு யானை

இதனிடையே, சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது. சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற தடைகோரி, அருண் பிரசன்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், யானை - மனிதர்களுக்கு இடையில் மோதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளைப் பாதுகாக்கும் வகையில், ஊருக்குள் நுழையும் யானைகளைப் பிடித்து, வனப்பகுதிக்குள் விடுவதற்கு மாற்று வழிகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும். 

யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்க தனிக் குழு அமைக்க வேண்டும். ஊருக்குள் நுழையும் யானைகளைப் பாதுகாப்பாக வனப்பகுதிகளில் விடுவதற்குத் தகுந்த விதிமுறைகளை வகுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது. 

யானை

இந்த வழக்கு, இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர், ‘சின்னத்தம்பி யானை தற்போது அமராவதி பகுதியில் நடமாடிவருகிறது. யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப இரு கும்கி யானைகளும், யானை நிபுணர் அஜய் தேசாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர்’ என்றார். மனுதாரர் தரப்பில், மதுக்கரை மகாராஜா என்ற யானையைப் பிடித்து கும்கியாக மாற்றும்போது, அது இறந்துவிட்டது எனக் குற்றம் சாட்டப்பட்டது.

தலைமை வனப் பாதுகாவலர் தரப்பு இதற்குப் பதிலளித்தது. `எல்லா யானைகளையும் கும்கி யானைகளாக மாற்ற முடியாது. முதலில் முதுமலை வனப்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டோம். சிறைபிடிப்பது கடைசி வாய்ப்பாகப் பயன்படுத்துவோம். இதுவரை யானையைப் பிடித்து கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை. வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம். இரு யானைகள் குட்டியுடன் வந்தன. அவற்றை திருப்பி அனுப்பியபோது, சின்னத்தம்பி யானை மட்டும் திரும்பி ஊருக்குள் வந்துவிட்டது. மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. கும்கியாக மாற்ற பல பயிற்சிகள் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

சின்னத்தம்பி

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,  சின்னத்தம்பி ஜேசிபி இயந்திரத்தின் மூலம் லாரியில் ஏற்றும்போது காயமடைந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நிபுணர்களின் கருத்தைத் தெரிந்துகொள்ளவேண்டியிருப்பதால், வழக்கு விசாரணை அடுத்த திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.