‘ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட செம்மரம்!’ - குடியாத்தத்தில் சுற்றிவளைத்த வனத்துறை | Forest department captures smuggling red sandals near Gudiyatham

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (04/02/2019)

கடைசி தொடர்பு:18:10 (04/02/2019)

‘ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட செம்மரம்!’ - குடியாத்தத்தில் சுற்றிவளைத்த வனத்துறை

ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட செம்மரக் கட்டைகளை, குடியாத்தம் அருகே வனத்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர், சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.

செம்மரக்கட்டை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லையில் சைனகுண்டா சோதனைச் சாவடி உள்ளது. இன்று காலை 8 மணியளவில், வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர், இந்தச் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவிலிருந்து சென்னை பதிவெண் கொண்ட கார் அதிவேகத்தில் வந்தது. காரை சோதனை செய்வதற்காக, வனத்துறையினர் கைகாட்டினர்.

செம்மரக்கட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த வனத்துறை

கார் நிற்காமல் சென்றது. வனத்துறையினரும், ஜீப்பில் விடாமல் 7 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்றனர். மோடிக்குப்பம் என்ற இடத்தில், காரை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். உடனே, காரில் இருந்த 2 பேர், கீழே இறங்கி வனத்துறையினரிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர். காரில் சோதனை செய்தபோது, சிறு சிறு துண்டுகளாகச் 33 செம்மர கட்டைகள் இருந்தன. ஒன்றரை டன் எடை கொண்ட அந்த செம்மர கட்டைகள், சுமார் ரூ.20 லட்சம் மதிப்பு இருக்கும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மரக் கட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த வனத்துறையினர், தப்பி ஓடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.