`உங்களுக்கு 20, எங்களுக்கு 10!'  - எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பா.ஜ.க. | Election alliance talks between Admk and BJP

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (04/02/2019)

கடைசி தொடர்பு:17:29 (04/02/2019)

`உங்களுக்கு 20, எங்களுக்கு 10!'  - எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பா.ஜ.க.

மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்புகளும் சிறுபான்மை வாக்குகளும் இந்த அணிக்கு எதிராகப் போகும் நிலை இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

`உங்களுக்கு 20, எங்களுக்கு 10!'  - எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பா.ஜ.க.

`நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பரம ரகசியம், ரகசிய முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது கூட்டணி பற்றி நிச்சயம் அறிவிக்கப்படும்' என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். `தேர்தலுக்குப் பிறகே கூட்டணி என எடப்பாடி பழனிசாமி நினைத்தாலும் பா.ஜ.கவின் நெருக்குதல்கள் தொடர்கின்றன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம்

`அ.தி.மு.க-வோடு பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டனர்' என்ற தகவல் வெளிவரத் தொடங்கிவிட்டது. `தோழமைக் கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க-வில் எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை உள்ளது. ஆனால், முடிவை ஒன்று சேர்ந்து அறிவிப்போம். எங்களுடன் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். தேசிய கட்சிகளாக இருந்தாலும் மாநில கட்சிகளாக இருந்தாலும் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமையும்' என்றார் பன்னீர்செல்வம். `அவர் குறிப்பிடும் தேசிய கட்சி பா.ஜ.க தானே' எனக் கேள்வி எழுப்பியபோது, 'தேசியக்கட்சிகள் என்றால் பாஜக மட்டுமல்ல, பல கட்சிகள் உள்ளன' என விளக்கம் கொடுத்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். 

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான விருப்ப மனுவை விநியோகித்து வருகிறது அ.தி.மு.க தலைமைக் கழகம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், கோகுலஇந்திரா, மாதவரம் மூர்த்தி, ஆர்.வி.எம்.கண்ணன், சிவகங்கை எம்.பி செந்தில்நாதன் உள்ளிட்டோர் விருப்பமனுக்களை வாங்கிச் சென்றனர். 

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் 10-ம் தேதி திருப்பூருக்கு வர இருக்கிறார் பிரதமர் மோடி. அவரையடுத்து, 12-ம் தேதி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் 14-ம் தேதி அமித் ஷாவும் 15-ம் தேதி நிதின் கட்கரியும் தமிழகம் வர உள்ளனர். தேசியத் தலைவர்களின் அடுத்தடுத்த சந்திப்புகளால் உற்சாகத்தில் இருக்கிறது தமிழக பா.ஜ.க. அதேநேரம், அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் வேகம் எடுத்துள்ளதாகச் சொல்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள். ``இன்னும் இரண்டு வாரங்களில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என அ.தி.மு.க தரப்பில் பேசி வருகின்றனர். அவ்வளவு நாள்கள் தேவையில்லை என நினைக்கிறோம். இன்னும் சில நாள்களில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம்" என்கிறார் பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர். 

தமிழிசை

கூட்டணிப் பேச்சு தொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.முக முன்னணி நிர்வாகி ஒருவர், ``பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதை தம்பிதுரை மட்டும் எதிர்க்கவில்லை. சிட்டிங் எம்.பிக்கள் உள்பட அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு காட்டுகின்றனர். ` கூட்டணி வேண்டாம்' என்ற முடிவில் தான் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார். இதுதொடர்பாக டெல்லிக்குக் கொடுக்கப்பட்ட தகவலில், `தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம், மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தால், எங்களுக்கு அமைச்சர் பதவிகூட தேவையில்லை' எனத் தெரியப்படுத்தியுள்ளனர். ஆனால், தமிழக பா.ஜ.கவினர் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். கொடநாடு விவகாரம் உள்பட இந்த அரசுக்குச் சிக்கல் கொடுக்கக் கூடிய அளவுக்கு ஏராளமான வழக்குகள் உள்ளன. இதனால் பா.ஜ.க-வினரின் நெருக்குதல்களுக்குப் பணிந்து போவதைத் தவிர ஆட்சியாளர்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை" என விவரித்தவர், 

பன்னீர்செல்வம்

``டெல்லி பேச்சுவார்த்தையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள்தான் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு எனக் குழு அமைத்தாலும் அவர்கள்தான் அனைத்தையும் முடிவு செய்கின்றனர். தொகுதிப் பங்கீடு குறித்து தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள், `நீங்கள் 20 தொகுதிகளில் போட்டியிடுங்கள். பா.ம.க-வுக்கும் தே.மு.தி.க-வுக்கும் நாங்கள் கொடுத்துக் கொள்கிறோம்' எனக் கூறியுள்ளனர். அதாவது, பா.ம.க-வுக்கு 6 இடங்களையும் தே.மு.தி.க-வுக்கு 4 இடங்களையும் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 10 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. தே.மு.தி.க வராவிட்டால், அந்தத் தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடலாம் என பா.ஜ.க தரப்பில் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வடசென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வும் தென்சென்னையில் பா.ஜ.க-வும் போட்டியிட வேண்டும் எனச் சிலர் கூறியுள்ளனர். தென்சென்னை எம்.பியாக இருக்கும் ஜெயவர்தன் வடசென்னையில் போட்டியிடலாம். மத்திய சென்னை தொகுதியை கோகுல இந்திரா குறிவைக்கிறார். 

தம்பிதுரை

மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்புகளும் சிறுபான்மை வாக்குகளும் இந்த அணிக்கு எதிராகப் போகும் நிலை இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அ.தி.மு.க-வோடு கூட்டணிக்குச் செல்லாவிட்டால், அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் இருக்கிறது பா.ஜ.க. எனவேதான், அ.தி.மு.க-வின் அடிப்படை வாக்கு வங்கியை குறிவைத்து அவர்கள் செயல்படத் தொடங்கிவிட்டனர். தம்பிதுரையை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன" என்றார் நிதானமாக.