‘கோயில்களை அபகரித்த கும்பல்!’- கலெக்டரிடம் மண்டியிட்டு மனு கொடுத்த மக்கள் | save our temples, gudiyatham people urges vellore district collectos

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (04/02/2019)

கடைசி தொடர்பு:18:40 (04/02/2019)

‘கோயில்களை அபகரித்த கும்பல்!’- கலெக்டரிடம் மண்டியிட்டு மனு கொடுத்த மக்கள்

‘‘கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இரு தரப்பினரிடமிருந்து அக்கோயில்களை மீட்டு, ஊர் கூடி ஒரே திருவிழாவாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என குடியாத்தத்தைச் சேர்ந்த கிராம மக்கள், மண்டியிட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மண்டியிட்டு மனுகொடுத்த மக்கள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராமன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. குடியாத்தம் கீழ் ஆலத்தூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 15-க்கும் மேற்பட்டோர், கோரிக்கை மனுவுடன் கலெக்டரை சந்திக்க வந்திருந்தனர். அவர்கள், குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கு முன்பு திடீரென மண்டியிட்டனர். கோரிக்கை மனுவைக் கையில் ஏந்தி, முட்டிப் போட்டபடியே அரங்கிற்குள் நுழைந்தனர். போலீஸார், அவர்களைத் தடுத்துநிறுத்தி, 5 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதி தந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் உள்ள கங்கையம்மன் கோயிலில், பங்கி மந்திரி என்பவரின் தரப்பும், புருஷோத்தமன் என்பவரின் தரப்பினரும், அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக, இரண்டு திருவிழாவாக நடத்திவருகின்றனர்.

மண்டியிட்டு மனுகொடுத்த மக்கள்

இக்கோயில் தவிர, அதே பகுதியில்  உள்ள பஜனைக் கோயில், ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகர் கோயில், ராஜகாளியம்மன் கோயில், சப்த மாதாக்கள், பாலமுருகன் கோயில் உட்பட, ஊரில் உள்ள பல கோயில்கள், கடந்த 14 ஆண்டுகளாக, இந்த இரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. வழிபாடு நடத்தப்பட்டவுடன், இக்கோயில்களின் கதவைப் பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிடுவார்கள். இவர்களால் ஊர் பொதுமக்கள் கோயிலுக்குச் சென்று நிம்மதியாக வழிபட முடியவில்லை. கிராம மக்களை இரு தரப்பினரும் மிரட்டுகின்றனர். இது சம்பந்தமாக ஏற்ககெனவே கலெக்டர், வருவாய் அலுவலர், தாசில்தார், காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டோம். இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த மனுமீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, இனி வரும் காலங்களில் ஊர்கூடி ஒரே திருவிழாவாக நடத்த ஏற்பாடுசெய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தனர்.