கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்ற கருவிகள்: தடுக்க பிரதமருக்கு 60 விஞ்ஞானிகள் கடிதம்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்ற கருவிகள் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 60 விஞ்ஞானிகள் அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று தொடர் போராட்டம் நடந்து வரும் வேளையில், கூடங்குளம் அணு மின்நிலையம் செயல்படுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், அணுமின்நிலையத்தின் கிரிட்டிகல் சேப்டி சிஸ்டம் பிரிவில் பயன்படுத்தப்படும் 4 வால்வுகள் தரம் குறைந்தவை என்று ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
 

இதனிடையே, தரம் குறைந்த அந்த கருவிகள் பயன்படுத்தப்படுவதை தடுக்க கோரி உயர் கல்வி நிலையங்களைச் சேர்ந்த 60 விஞ்ஞானிகள், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதங்களில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட அந்த கருவிகள் தரம் வாய்ந்தவைதானா என்பதை உறுதி செய்த பின்னரே அங்கு மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது.

அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கிவிட்டால், கதிர் வீச்சு காரணமாக அந்த கருவிகளின் தரம் பற்றி பரிசோதிக்க முடியாமல் போய்விடும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் கடிதங்களை, தமிழ்நாடு, கேரளா மாநில முதல்வர்களுக்கும், மத்திய அணுசக்தி துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் மும்பை ஐ.ஐ.டி., இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்- பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த 60 விஞ்ஞானிகள் அந்த கடிதங்களில் கையெழுத்திட்டு உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!