ஒதுங்கியிருந்தவர் திடீர் சுறுசுறுப்பு! - செ.ராமச்சந்திரன் வருகையால் மதுரை தி.மு.க-வில் அதிர்ச்சி | Madurai C.Ramachandran back in to active politics

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (04/02/2019)

கடைசி தொடர்பு:19:10 (04/02/2019)

ஒதுங்கியிருந்தவர் திடீர் சுறுசுறுப்பு! - செ.ராமச்சந்திரன் வருகையால் மதுரை தி.மு.க-வில் அதிர்ச்சி

தி.மு.க-வில் சிலகாலம் ஒதுங்கியிருந்த முன்னாள் மதுரை மேயர் செ.ராமசந்திரன் இன்று ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மதுரை, மாவட்டத் தி.மு.க-வினரில் பலர் மகிழ்ச்சியும் சிலர் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்டமாக ஊராட்சி சபை என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி பொதுமக்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் குறைகளைக் கேட்டு வருகிறார். அந்த வகையில் இன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி தனக்கன்குளத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்திலும், அதன் பின்பு தி.மு.க வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இதற்காக நேற்று இரவே மதுரை வந்தவர், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அழகிரி ஆதரவாளர்கள் இப்போது அமைதியாகிவிட்டார்கள். அவர்களில் சிலர்  நம்மிடம் வர விரும்புகிறார்கள் என்ற தகவலை, கட்சி நிர்வாகிகள் சிலர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். இப்போதைக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார் ஸ்டாலின். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


இன்று காலை 8.30 மணிக்கு கூட்டம் என்று சொன்னாலும் 10 மணிக்கு மேல்தான் நிகழ்ச்சிக்கு வந்தார் ஸ்டாலின் திரட்டப்பட்டிருந்த பெண்கள் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். பல்வேறு பிரச்னைகளைப் பெண்கள் பேசினார்கள். ஸ்டாலின் பேசும்போது, ``தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கல்விக்கடனை ரத்து செய்யவும் முயற்சி எடுக்கப்படும். மத்தியிலும் மாநிலத்திலும் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வரும்போது ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ-வும் முன்னாள் மதுரை மேயருமான செ.ராமச்சந்திரன் கலந்துகொண்டார். மக்களால் மதிக்கப்படும் தனிப்பட்ட செல்வாக்குள்ள நபரான செ.ராமச்சந்திரன், சில காலம் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு இவர்தான் சரியான நபர் என்று சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இவரை சென்னைக்கு அழைத்து ஸ்டாலின் பேசினார். தற்போது மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக அவரைத்தான் அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடந்த ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டது சில தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க