`ஊரைவிட்டு விரட்டுறாங்க!' - கடலூர் கலெக்டர் ஆபீஸில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி | Cuddalore woman attempted suicide with son at district collector office

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (04/02/2019)

கடைசி தொடர்பு:19:55 (04/02/2019)

`ஊரைவிட்டு விரட்டுறாங்க!' - கடலூர் கலெக்டர் ஆபீஸில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில், தாயும் மகனும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்  கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மகன்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று, வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாகக் கொடுத்துவந்தனர். அப்போது பண்ருட்டி அருகே உள்ள மேல்காங்கேயன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை (52), இவரது மகன் முருகன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். 

அப்போது அவர்கள், ``எங்களுக்கும், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. அவர்கள் எங்களை ஏமாற்றி சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டனர். மேலும், எங்கள் வீட்டில் இருந்து லட்சக்கணக்கான பொருள்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். எங்களை ஊரில் தங்கக்கூடாது எனவும் மிரட்டிவருகின்றனர். இதுகுறித்து போலீஸில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறி, திடீரென மறைத்துவைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்துத் தங்கள் உடலில் ஊற்றிக்கொண்டனர்.

இதைப் பார்த்த கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவர்களைத் தடுத்து, அவர்கள் கையில் இருந்து பெட்ரோல் பாட்டிலைப் பிடுங்கினர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாயும் மகனும் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.