இயற்கை உபாதைக்காகப் பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் - ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயம்! | women jumped from government bus got injured

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (04/02/2019)

கடைசி தொடர்பு:18:46 (04/02/2019)

இயற்கை உபாதைக்காகப் பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் - ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை உபாதைக்காகப் பேருந்தை நிறுத்தாததால் அரசுப் பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயமடைந்தார்.

பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரின் மனைவி பாண்டியம்மாள் ஆண்டிபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு அரசுப் பேருந்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கடந்த 2 நாள்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு பேருந்தில் வந்தபோதும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. எனவே, இயற்கை உபாதை கழிப்பதற்காகப் பேருந்தை நிறுத்த வேண்டும் என ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பாண்டியம்மாள் கூறியுள்ளார். ஆனால், பேருந்து நிறுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட பாண்டியம்மாள் அழகாபுரி அருகே சென்றுகொண்டிருந்தபோது பேருந்தில் இருந்து கீழே குதித்தார்.

அரசுப் பேருந்து

இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.