அதிகாரிகளைக் குற்றம்சாட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ! - அலட்சியப்படுத்திய ஆட்சியர் | collector rejects to hear the demand of ruling party MLA

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (04/02/2019)

கடைசி தொடர்பு:19:40 (04/02/2019)

அதிகாரிகளைக் குற்றம்சாட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ! - அலட்சியப்படுத்திய ஆட்சியர்

அரசுக்கு அதிகாரிகள் தெரிவித்த தவறான தகவலால் தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய நிலையில், அதை மாவட்ட ஆட்சியர் அலட்சியப்படுத்திய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ இன்பதுரை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை. அ.தி.மு.க-வின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞராகச் செயல்பட்டவர். தமிழக அரசின் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார். தனது தொகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆட்சியரைச் சந்திக்க அவர் வந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 87 அடி தண்ணீர் உள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றின் நான்கு ரீச்கள் மூலம் விவசாயத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட சில குளங்கள் இன்னும் நிரம்பாத நிலை உள்ளது. அதனால் பொதுமக்களின் குடிநீர் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளதால் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மக்களோடு மக்களாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷை சந்தித்து ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ மனு அளித்தார். 

இன்பதுரை எம்.எல்.ஏ

அப்போது ஆட்சியரிடம் பேசிய அவர், ``ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கிராம குளங்கள் வறண்டு கிடக்கின்றன. ஆனால், எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறப்பதற்குப் பதிலாக பிற இடங்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், பொதுப்பணித்துறையில் உள்ள இரு அதிகாரிகள். அந்த அதிகாரிகள் தவறான தகவலை அரசுக்கு அளித்து இருக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், `உங்களோடு விவாதம் செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் மனுவைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’ என அலட்சியமாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த ஐ.எஸ்.இன்பதுரை, ``ராதாபுரம் தொகுதி வறட்சியான பகுதியாகும். அந்தப் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்புவதற்காகத் தாமிரபரணி ஆற்றில் இருந்து 3 மற்றும் 4-வது ரீச் மூலமாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கடைமடைக் குளங்கள் நிரம்புவதற்கு முன்பாகவே முதல் இரு ரீச் மடைகளைத் திறந்துவிட்டதால் எங்கள் பகுதிக்கான குளங்கள் நிரம்ப முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

ஏற்கெனவே, ராதாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால், கடல் நீர் உள்ளே புகுந்து உப்புநீராகிவிட்டது. அதனால் குடிநீர் ஆதாரங்கள் சீர்கெட்டுள்ள நிலையில், குளங்கள் நிரம்பாவிட்டால் குடிநீர் பிரச்னை தீவிரமடையும். இந்தப் பகுதியில் கிட்னி நோய் அதிகம் உள்ளது. சரியான குடிநீர் இல்லாததே அதற்குக் காரணம். இந்தநிலையில், அனைத்து குளங்களும் நிரம்பும் வகையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவை எடுப்பதுடன், தவறான தகவலைக் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். 

மனு அளித்த எம்.எல்.ஏ

ஆட்சியரின் அலட்சியச் செயல்பாடுகள் தொடர்பாகத் தலைமைச் செயலாளரிடமும் முதல்வரிடமும் புகார் அளிக்க அ.தி.மு.க-வினர் திட்டமிட்டுள்ளனர்.