`கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது!’ - மத்திய அரசு | Government of India has approved Keezhadi excavation for the field session 2018-19

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (04/02/2019)

கடைசி தொடர்பு:18:57 (04/02/2019)

`கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது!’ - மத்திய அரசு

கீழடியில் 2018-19ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளத் தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

கீழடி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வு பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, அகழாய்வினை கடந்த 2015-ல் தொடங்கியது. இதில் கிடைத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இவை கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, 2017 ஜனவரியில் இரண்டாம் கட்ட ஆய்வு தொடங்கியது இதில் சுமார் 6,000 தொல்பொருள்கள் மாதிரிகள் கிடைத்தன. இவை அனைத்தும் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள தொல்லியல் துறையின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

பல்வேறு போராட்டங்களை கடந்துதான் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாம் கட்ட ஆய்வு நிறுத்தப்பட்டு இந்த ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் குரல் கொடுத்தனர். இதனையடுத்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி பணிகள் ராம் என்பவர் தலைமையில் நடைபெறும் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது. அவரும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்பித்தார். 

நான்காம் கட்ட ஆய்வை மேற்கொள்ள நிதியில்லை என மத்திய அரசு காரணம் காட்டியது. இதனையடுத்து தமிழகத் தொல்லியல் துறை அதனைக் கையில் எடுத்தது. இந்தப் பணிக்குக் கண்காணிப்பாளராக தமிழகத் தொல்லியல் துறையின் சிவானந்தம் நியமிக்கப்பட்டார். அவரும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தார்.  இந்நிலையில் அடுத்தக்கட்ட ஆய்வை மேற்கொள்ளத் தமிழக அரசு சார்பில் மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. 5-ம் கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதத்தில் அனுமதி அளித்தது.

இந்தநிலையில் மக்களவையின் கேள்வி நேரத்தின்போது கீழடி அகழாய்வு குறித்து தஞ்சை தொகுதி அ.தி.மு.க எம்.பி கே.பரசுராமன் கேள்வி எழுப்பினார், கீழடி அகழாய்வுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, கார்பன் பகுப்பாய்வில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் எந்த காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கீழடி அகழாய்வுக்கு அரசு எடுத்துள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்தக் கேள்விக்கு இதற்குப் பதிலளித்த மத்திய கலாசாரத் துறை துறை அமைச்சர் மகேஷ் சர்மா, `கீழடி அகழாய்வுக்கு 2015- 2016 நிதியாண்டில் 50 லட்சமும், 2016- 2017 நிதியாண்டில் ரூ.44.50 லட்சமும், 2017 -2018 நிதியாண்டில் ரூ.23.65 லட்சமும் இந்தியத் தொல்லியல் துறைக்கு ஒதுக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் 2017 -2018 நிதியாண்டில் ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டது. கீழடியில் கிடைத்த பொருள்களை கார்பன் பகுப்பாய்வு செய்ததில் அவை கி.மு. 2-ம் நூற்றாண்டுகளை சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கீழடியில் 2018-19ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளத் தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்திருக்கிறார்.