சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 3 தொழிலாளர்கள் பலி (படங்கள்)

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சிவகாசி புதுத்தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு விளாம்பட்டி அருகே கிச்சாநாயக்கன்பட்டியில் நியூ மீனாட்சி பயர் ஓர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு 30 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு அறையில் பென்சில் வெடிக்கு முனை மருந்து செலுத்தும் வேலையில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் விளாம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (65), 28 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு அறையில் ஏற்பட்ட தீ மற்ற அறைகளுக்கும் பரவியது.

இதில் பிற அறைகளில் வேலை செய்து கொண்டிருந்த விளாம்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன், ரவிச்சந்திரன், கார்த்தி, அன்னலட்சுமி, ராஜா, சமுத்திரம், காளியம்மாள், பாண்டியராஜ், பெருமாள், பாண்டியம்மாள், மனோஜ்குமார், பரமசிவம், நாகராஜ் ஆகிய 13 பேர் பலத்த காயமடைந்தனர்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்  பரமசிவம் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வெடி விபத்தில் காயமடைந்த விளாம்பட்டி மாரீஸ்வரன் உள்பட சிலருக்கு தீக்காயம் 90 சதவீதத்துக்கு மேல் இருப்பதால் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன் உள்பட அதிகாரிகள் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

இதில் வேதனை என்னவென்றால், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பாண்டியம்மாள் தனது ஒன்றரை வயது மகன் மனோஜ் குமாரை அருகில் உள்ள மரத்தி்ல் தொட்டில் கட்டி போட்டுள்ளார். இந்த வெடி விபத்தில் சிதறிய கல் ஒன்று குழந்தை மனோஜ்குமார் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தைக்கு 9 தையல் போடப்பட்டுள்ளது. குழந்தையின் அம்மாவுக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.


எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!